
நம் முகத்தின் சருமம் சுருக்கம் மற்றும் தொய்வின்றி, பிறரை வசீகரிக்கும்படியான அழகுடன் பளபளவென்று மின்னுவதற்கு க்ளென்சிங், ஸ்கிரப், மசாஜ், ஃபேஸ் பேக் போன்ற பல படிகளில் ஃபேஷியல் செய்து வருகிறோம். இது தவிர்த்து, நம் ஃபிரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி முகத்தை அழகு பெறச்செய்யலாம். அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.காலையில் தூங்கி எழும்போது முகம் உப்பியும் கண்கள் வீக்கமாகவும் காணப்படுகின்றனவா? கவலை வேண்டாம். ஃபிரிட்ஜிலிருந்து சில ஐஸ் கட்டிகளை எடுத்து முகம் முழுவதும் மெதுவாக தேய்த்துவிடுங்க. அப்போது இரத்தக் குழாய்களில் தேங்கியிருக்கும் அதிகப்படியான திரவம் வெளியேற்றப்பட்டு, குழாய்கள் நார்மல் சைஸுக்கு திரும்பும். அப்போது சோர்வுற்று வீக்கமடைந்த சருமம் உடனடியாக புத்துணர்வு பெறும்.
2.ஐஸ் இயற்கையான ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இது சருமத்தில் உண்டாகும் சிவந்த நிறத் திட்டுகளை ஒரிஜினல் நிறத்திற்கு மாற்றி சருமத்தை சமநிலைப்படுத்த உதவும். பருக்களை உடைத்து வெளியேற்றவும், எரிச்சலைக் குணமாக்கவும் செய்யும். தொடர்ந்து ஐஸ்கட்டி மசாஜ் செய்து வந்தால் பருக்கள் வருவது குறையும்.
3.ஐஸ்கட்டியை முகத்தில் தேய்க்கும்போது முகத்திலுள்ள நுண்ணிய இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் மேன்மை பெறும். ஐஸ்கட்டியின் குளிர்ச்சியால் முகத்தின் வெப்பம் திடீரென குறைகிறது. இதை சற்றும் எதிர்பாராத நம் உடல் முகத்திற்கு அதிக இரத்தத்தை பம்ப் செய்து அனுப்புகிறது. இதனால் சரும செல்களுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மேலும் சருமம் மிருதுத்தன்மையும், ரோஸ் நிற பள பளப்பும் பெறும்.
4.சருமத்தில் உள்ள துவாரங்கள் பெரிதாகவும் எண்ணெய்ப் பசையுடனும் இருந்தால் சருமம் சமநிலையற்று காணப்படும். ஐஸ், தற்காலிகமாக துவாரங்கள் சுருங்கவும், எண்ணெய்ப்பசை நீங்கவும் உதவி புரியும். முகத்தில் போடும் மேக்கப் அதிக நேரம் நீடித்திருக்கவும் வாய்ப்பு உண்டாக்கும்.
5.முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய சருமத்தில் தொய்வு, சுருக்கம், கோடுகள் போன்றவை உண்டாவதை இந்த ஐஸ் தெரபி தடுத்து நிறுத்தும். தோலின் எலாஸ்டிசிட்டியை மேம்படுத்தவும், கொல்லாஜன் உற்பத்தி அதிகரிக்கவும் உதவி புரியும். மொத்தத்தில் சருமம் பளபள வென்று இளமைத் தோற்றம் கொண்டு விளங்க, ஐஸ் கட்டி ஒரு செலவில்லா ஆன்டி ஏஜிங் உபகரணம் என்று கூறலாம்.
6.சூடான வானிலை அல்லது ஸ்ட்ரெஸ் போன்றவை சருமத்தை சோர்வுடனும் மந்தமாகவும் காணப்படச் செய்யும். அதற்கு இந்த ஐஸ்கட்டி சிகிச்சை அளித்தால் முகம் உடனடியாக குளிர்ச்சியும் புத்துணர்வும் பெறும். சருமம் பனித்துளி போல் மின்னும். ஒரு நிமிடத்திற்குள் அழகு நிலையம் சென்று செல்களைப் புதுப்பித்து புத்துயிர் பெற்று வந்தது போன்ற திருப்தி கிடைக்கும்.