
பெண்கள் உதட்டழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள் அப்படி செலுத்தும்போது மிக எளிமையான முறையில் உதட்டழகை மேம்படுத்தலாம் அதைப் பற்றிய 8 குறிப்புகள் இப்பதிவு.
பெண்களின் உதடுகள் அடர்த்தியாகவும் மென்மையாகவும் இருக்கின்றனவோ அந்த அளவுக்கு உதடுகள் மிகுந்த கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கும். இரவில் படுக்கச் செல்லுமுன் நல்ல வெண்ணெயை உதடுகளில் பூசி வந்தால் உதடுகள் அடர்த்தியாகவும், மென்மையாகவும் மாறி அழகு சேர்க்கும்.
இளம் பெண்கள் மிகவும் அழுத்தமான சிவப்பு வண்ணமுள்ள உதட்டுச் சாயத்தை அணிவது சரியல்ல; அழுத்தமான உதட்டுச் சாயம், முதுமைத் தோற்றத்தை உண்டாக்கும். நடுத்தர வயதுப் பெண்கள் வேண்டுமானால் அழுத்தமான வண்ணத்தில் உதட்டுச் சாயம் பூசலாம். இளம்பெண்கள் இலேசான வண்ணத்தில் உதட்டுச் சாயம் பூசுவதுதான் இளமை கொழிக்கும்; எழிலைக்கூட்டும்.
மாநிறமாக உள்ள பெண்கள் ஓரளவு ஆரஞ்சு வண்ணத் தோற்றமுடைய உதட்டுச் சாயத்தைப் பூசினால் எடுப்பாக இருக்கும். நல்ல சிவந்த மேனியர் ரோஜாப் பூ வண்ணத்தைப் பயன்படுத்தலாம். சற்று கருநிறமாக உள்ள பெண்களுக்கு மிகவும் இலேசான சிவப்பு நிறமுள்ள உதட்டுச்சாயம் அழகாக இருக்கும்.
சீதோஷ்ண நிலை காரணமாகவோ, வேறு உடல் நலக்கோளாறு காரணமாகவோ உதட்டுத்தோல் உரிந்தால் பல்லால் கடித்தோ வேறு விதமாகவோ அகற்ற முயற்சி செய்யக்கூடாது. அது நாளடைவில் உதடுகளின் அழகைக் கெடுத்து விடக்கூடும். உதடுகளின் மென்மை கெட்டு, சொர சொரப்பான நிலையை உதடுகள் அடைந்து விடக்கூடும். உதட்டுத்தோல் உரிந்தால் அதை அப்படியே விட்டு விட்டால் தானாக கீழே விழுந்துவிடும். அல்லது மருத்துவரின் யோசனைப்படி ஏதாவது களிம்பு தடவி, அதை அகற்ற முயற்சி செய்யலாம். உதடுகள் அழகு உறுப்புகளில் தலையானவை என்பது எப்போதும் உங்கள் நினைவில் இருக்கவேண்டும்.
உதட்டுச் சாயம் பூசும்போது சில பெண்களின் உதடுகளில் அது சரியாகப்படாமல் திட்டுத் திட்டாக இருக்கும். அப்படியே அதை விட்டுவிட்டால் அவலட்சணமாகத் தோன்றும். உதட்டுச் சாயம் பூசுவதற்கு முன்பு உதடுகளில் சிறிதளவு கிளிசரின் தடவிவிட்டு அதன் பிறகு உதட்டுச் சாயம் பூசலாம். அல்லது உதடுகளில் சிறிதளவு முகப்பவுடரை ஒத்திவிட்டுப் பிறகு உதட்டுச் சாயம் பூசினால் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.
சில பெண்கள் பற்கள் என்ன தேய்த்து விளக்கினாலும் முழு அளவு வெண்மையாக மாறாது. சற்று மங்கிய மஞ்சள் நிறமாகவே காட்சி தரும். அத்தகைய குறைபாடு உடைய பெண்கள், நல்ல ஆரஞ்சு நிறத்தில் உதட்டுச் சாயம் பூசினால் பற்கள் நல்ல வெண்மையாக இருப்பது போலத் தோன்றும்.
உதட்டுச் சாயம் போடும்போது ஒரேயடியாக வாயை அகலத் திறந்து விடுவதும் நல்லதல்ல; அதேபோல உதடுகளை மூடிய நிலையில் போடுவதும் சரியல்ல; சிறிதளவு உதடுகளை விரித்து பாங்காக உதட்டுச் சாயத்தைப் பூசவேண்டும்.
உதடுகளின் இயற்கை வண்ணம் போன்று தோற்றமளிக்கும் விதத்தில் மிகமிக இலேசாக உதட்டுச் சாயம் பூசினால்தான் நம் நாட்டுப் பெண்களுக்கு எடுப்பாக இருக்கும். மேலை நாட்டுப் பெண்கள் பளிச்சென்று கண்களைப் பறிக்கும் விதத்தில் சாயம் பூசுவார்கள். நமது பெண்களுக்கு இது ஒத்து வராது.