உலகில் கொரிய பெண்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று பலரும் வியந்து பார்ப்பதுண்டு. அப்படி என்ன தான் அழகுக் குறிப்புகளை இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என அலசுகிறது இந்தப் பதிவு.
இயற்கையாகவே மண்ணில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் அழகானவை தான். அதில் மனிதர்கள் மட்டும் தங்கள் அழகை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆண்கள், பெண்கள் என இருவருமே தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் செயலாற்றுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான அழகுக் குறிப்புகளைப் பயன்படுத்தினாலும், அதன் நோக்கம் என்னவோ ஒன்று தான். நம் நாட்டில் பெண்களும், ஆண்களும் எந்த மாதிரியான அழகுக் குறிப்புகளைப் பயன்படுத்துவார்கள் என்பது நமக்கெல்லாம் ஓரளவு தெரியும். ஆனால் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் அழகுக் குறிப்புகள் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான். அவ்வகையில், உலகளவில் கவனம் பெற்ற கொரிய நாட்டுப் பெண்களின் அழகுக்கு என்ன தான் காரணம் என்று நாம் சிந்தித்து இருக்கிறோமா?
கொரியாவில் நிலவும் இயற்கையானச் சூழலும் பெண்களின் அழகுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மற்ற நாடுகளில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்கள் பலவும் கொரியாவில் தான் தயாரிக்கப்படுகின்றன. அழகு நிலையத்தில் என்னவெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் கொரிய பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அடிக்கடி செய்து வருகிறார்கள். அழகு நிலையத்தில் செய்யப்படும் ஃபேஷியலை இவர்கள் வீட்டிலேயே செய்கிறார்கள். முகத்தைக் கழுவும் போது ஆயில் கிளிஞ்சிங் மற்றும் தண்ணீர் கிளிஞ்சிங் முறையை இவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஆயில் கிளிஞ்சிங் முறையில் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்கி விடும். தண்ணீர் கிளிஞ்சிங் முறையில் முகத்தில் இருக்கும் தூசுகள் மற்றும் வியர்வை நீங்கி விடும். இதனால் தான் கொரிய பெண்களின் முகம் பளபளப்பாக இருக்கிறது.
அனைத்துப் பெண்களும் முகத்தில் மசாஜ் செய்து கொள்வது இயல்பான ஒன்று தான். ஆனால், கொரிய பெண்கள் செய்யும் மசாஜ் சற்று வித்தியாசமாக இருக்கும். இவர்கள் V லைன் முறைப்படி தான் முகத்தில் மசாஜ் செய்கின்றனர். அதாவது இரண்டு கண்களையும் இணைக்கும் படி V வடிவத்தில் மசாஜ் செய்கின்றனர். இதன் மூலம் கண்கள் மற்றும் வாய்க்கு அருகில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
நாமெல்லாம் குளித்து முடித்தவுடனே முகத்தை துடைத்து விட்டு காற்று வாங்க மின்விசிறியை ஆன் செய்வோம். ஆனால், கொரிய பெண்கள் குளித்தவுடன் முகத்தை துடைத்து விட்டு ஈரப்பதமான கிரீம்களை முகத்தில் தடவுவார்கள். குளிக்கும் போது முகத்தில் இருக்கும் நுண் துளைகள் திறப்பதால் அதனை மூடுவதற்குத் தான் இப்படி செய்கிறார்கள்.
மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் வறண்ட முகத்திற்கு பொலிவை அளிப்பதால், இந்த உணவுகளை இவர்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் தான் கொரிய பெண்கள் அழகாக மட்டுமல்லாமல் பொலிவுடனும் இருக்கிறார்கள். இவர்கள் செய்வதில் பாதியை நாம் செய்தாலே அழகைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.