முகத்திற்கு மேன் மேலும் பொலிவும் அழகும் சேர்க்க பெண்கள் தினசரி சில மணி நேரத்தை ஒதுக்குவது என்பது அவர்களின் தேவை மட்டுமல்ல. அது அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கக் கூடிய விஷயமும் ஆகும். அதற்காக அவர்கள் க்ளீன்ஸிங், டோனிங், எக்ஸ்ஃபோலியேடிங், மாய்ஸ்ச்சரைஸிங், ஃபேஸ் மாஸ்க் என பல வழி முறைகளைப் பின்பற்றி வருவதைக் காணலாம்.
சருமப் பராமரிப்பில் ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டு வர சமீபத்திய ட்ரெண்டிங்காக ஃபேஸ் ஐஸ் ரோலர் என்றொரு உபகரணம் வந்துள்ளது. சிலின்ட்ரிக்கல் வடிவமுடைய இதன் உள்ளே தண்ணீர் அல்லது ஒரு வகை ஜெல் நிரப்பப்பட்டுள்ளது. இதை ஃபிரீசரில் வைத்தெடுத்து முகத்தில் உபயோகிக்க வேண்டும். அப்போது முகம் குளிர்ச்சியும் புத்துணர்வும் பெற்று இளமைத் தோற்றத்துடன் ஜொலிக்கும்.
இந்த ஐஸ் ரோலரை தினமும் காலையிலும் இரவிலும் ஒரு ஒரு முறை உபயோகிக்கலாம். உங்கள் சருமம் சென்சிடிவ் தன்மையுடையதாயின் வாரம் இருமுறை என ஆரம்பித்து தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். ஐஸ் ரோலர் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1. கண்களுக்கடியில் உள்ள உப்பினது போன்ற சருமத்தோற்றம் மற்றும் கருவளையங்களை மறையச் செய்யும் இந்த ஐஸ் ரோலர் ஃபேஷியல். குளிர்ச்சியான உணர்வு சருமத்தில் படும்போது உள்ளிருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி வீக்கத்தை குறைக்க உதவும்.
2. பியூட்டி பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்துவிட்டு வந்த பின் ஐஸ் ரோலர் உபயோகித்து, சிவந்து எரிச்சலுடன் இருக்கும் சருமத்திற்கு இதமளிக்கச் செய்யலாம். சிவந்த நிறமும் மறையும்.
3. ஐஸ் ரோலர் தரும் குளிர்ச்சியில் சருமத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள் சுருங்கி இறுக்கமடையும். அப்போது அங்குள்ள எண்ணெய்ப் பசை அங்கிருந்து வெளியேறிவிடும். அதன் மூலம் சருமம் சுத்தமடைந்து மிருதுவாகும்.
4. தினமும் காலையில் ஐஸ் ரோலர் உபயோகித்து வந்தால் சரும செல்கள் விழிப்புணர்வும் புத்துணர்ச்சியும் பெற்று புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பிக்கும். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
5. ஐஸ் ரோலர் உபயோகித்து முகத்தில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் சிறப்பாகும். முகம் பபளப்பு பெறும். ஒட்டு மொத்த சரும ஆரோக்கியம் மேன்மையுறும்.
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தில் ஒரு சிறிய இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஐஸ் ரோலரை ஓடச் செய்து, பக்க விளைவு இல்லையெனில் தொடர்ந்து உபயோகித்து பயன் பெறலாம். ஐஸ் ரோலர் ஒரு சிம்பிளான உபகரணம். ஃபிரீசரில் இரண்டு மணி நேரம் வைத்தெடுத்து, முகத்தின் மேல் பரப்பில் ஆரம்பித்து கீழாக முகம் முழுக்க இழுத்துவர வேண்டியதுதான்.
இந்த ஃபேஸ் ஐஸ் ரோலரை நீங்களும் வாங்கி உபயோகித்துத்தான் பாருங்களேன்!