அக்ரிலிக் ஃபைபர் என்றால் என்ன?
அக்ரிலிக் ஃபைபர் என்பது பாலி அக்ரிலோனிட்ரைல் எனப்படும் பாலிமரில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழை. அக்ரிலிக் ஃபைபர் ஜவுளித் தொழிலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இது ஆடைகள் முதல் வீட்டு அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
அக்ரிலிக் ஃபைபரில் தயாராகும் துணிகள்;
அக்ரலிக் ஃபைபர் கம்பளி இழைகளின் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. இது கம்பளிக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது. ஸ்வெட்டர்கள், தொப்பிகள், சாக்ஸ்கள் மற்றும் பின்னல் நூல் வகைகள் இவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் அக்ரலிக் துணிகளில் ஸ்டைலான டாப்ஸ் மற்றும் பிளவுஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் சிறப்பியல்புகள் காரணமாக தடகள டாப்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆக்டிவ் வேர்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் லவுஞ்ச்வேர், பைஜாமா, ஸ்கார்ஃபுகள், சால்வைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
சிறப்பியல்புகள்;
மலிவு;
கம்பளி, பருத்தி அல்லது பட்டு போன்ற இயற்கை இழைகளை விட அக்ரலிக் நூல் பெரும்பாலும் மலிவானது. பட்ஜெட் உணர்வுள்ள கைவினைஞர்கள் அல்லது பெரிய அளவில் துணிவகைகளை உருவாக்க விரும்புவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.
வசதி;
அக்ரிலிக் இழைகளில் தயாரிக்கப்படும் ஆடைகள் அணிந்து கொள்ள மிக சௌகரியமானவை. அதன் இழைகள் இலகு ரகமாகவும் மென்மையான அமைப்பையும் கொண்டுள்ளன. எனவே அவற்றை அணிய வசதியாக இருக்கிறது. அவை பெரும்பாலும் கம்பளியின் வெப்பத்தையும் உணர்வையும் பிரதிபலித்து உடலுக்கு வெதுவெதுப்பைத் தருகின்றன.
ஆயுள்;
அக்ரிலிக் வலிமையானது. எனவே இந்த துணியில் அந்துப்பூச்சிகள் போன்ற நுண்ணிய உயிர்கள் இவற்றை சேதப்படுத்த முடியாது. இது பல்வேறு கால சூழ்நிலைகளில் கூட தாக்குப் பிடிக்கும். வெளிப்புறப் பயன்பாட்டிற்கு ஏற்றது. இதன் வலிமை மற்றும் குறைந்த தேய்மானம் போன்றவை பிற வகையான ஆடைகளை விட நீடித்து உழைக்கக் கூடியவை. சில இயற்கை இழைகளைப் போல விரைவாக கிழிந்து போவதில்லை.
அக்ரலிக் இழைகள் பொதுவாக ஸ்வட்டர்கள் சாக்ஸுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. பெரும்பாலும் கம்பளி அல்லது பிற இழைகளுடன் இணைந்து தயாரிக்கப்படுவதால் இதன் ஆயுள் நீடித்து இருக்கிறது. போர்வைகள் தரை விரிப்புகள் மற்றும் மெத்தை துணிகள் போன்ற தயாரிப்புகள் அக்ரிலிக் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
இலகு ரகம்;
அக்ரலிக் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகள் குறைவான எடையை கொண்டிருக்கின்றன. அணிவதற்கு இலகுவாக, வசதியாக இருக்கின்றன. எனவே ஆடைகள் மற்றும் ஆபரணங்களை உருவாக்குவதற்கு இவை ஏற்றதாக இருக்கிறது.
வண்ணத்தை தக்க வைத்தல்;
அக்ரிலிக் இழைகளை எளிதில் சாயமிடலாம். எனவே துடிப்பான பலவித வண்ணங்களில் இந்த இழைகளைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கலாம். அக்ரிலிக் பைபரில் உருவாக்கப்பட்ட ஆடைகள் வண்ணங்களை அவ்வளவு எளிதில் இழப்பதில்லை. அதாவது சீக்கிரம் சாயம் போகாது.
ஈரப்பதத்தை உறிஞ்சுதல்;
இயற்கையான இழைகளைப்போல ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடியதாக இல்லாவிட்டாலும் இவை வெயில் காலத்தில் வேர்க்கும்போது வியர்வையை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. அதனால் இதை அணிபவர்கள் உலர்வாகவும் வசதியாகவும் உணர்வார்கள். குறைவாக ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால் இவை விரைவாக உலர்ந்துவிடுகின்றன.
இந்த வகையான ஆடைகளை வாஷிங்மெஷினில் துவைக்கலாம். விரைவாக உலரக் கூடியது மற்றும் பராமரிப்பது மிகவும் எளிது. குழந்தை உடைகள் அல்லது போர்வைகள் போன்ற அடிக்கடி துவைக்க வேண்டிய பொருட்களுக்கு அக்ரிலிக் ஃபைபர் உடைகள் மிகவும் ஏற்றவை.