அம்பானி வீட்டு திருமணம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்து விட்டது. அம்பானியால் எவ்வளவு பணத்தை வாரி இறைக்க முடியுமோ அப்படி இறைத்து தன்னுடைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணத்தில் நிறைய விஷயங்கள் பேசும் பொருளாக இருந்தாலும், முக்கியமாக மக்களை வியப்புக்குள்ளாக்கியது அம்பானியின் மருமகளான ராதிகா மெர்சென்ட்டின் உடைகள்தான். அவர் அணிந்து வந்த உடையின் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்று கூறப்படுகிறது. அதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
ராதிகா மெர்சென்ட் திருமணத்திற்கு அணிந்த ‘பனித்தர் லெஹேங்கா’ உடைதான் தற்போது மக்களால் அதிகமாக பேசப்பட்டு வரும் தலைப்பாக உள்ளது.
ராதிகாவின் உடையை மிகவும் புகழ் பெற்ற டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் வடிவமைத்துள்ளனர். பொதுவாக குஜராத்தியர்கள் பாரம்பரியமாக திருமணத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில்தான் உடை அணிவது வழக்கம். அதைப் போலவே பாரம்பரிய வண்ணத்தில் ராதிகா மெர்சென்ட்டின் பனித்தர் ஸ்டைல் லெஹேங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
அவருடைய லெஹேங்காவில் நேர்த்தியான Ivory zardozi cut work செய்யப்பட்டுள்ளது. இந்த உடையில் 5 மீட்டர் கொண்ட தலையில் போடப்படும் முக்காடு மற்றும் tissue shoulder துப்பட்டா தரையை தொடுமளவு நீண்டு இருக்கிறது. தோள்பட்டையில் போடப்பட்டிருக்கும் சிகப்பு நிற எம்பிராய்டரி துப்பட்டா மேலும் இந்த உடையின் அழகைக் கூட்டுவதாக உள்ளது. அவருடைய உடையில் Naqshi, Saadi, Zardozi ஆகிய ஒருங்கிணைந்த மூன்று விதமான கலைநயத்துடன் கூடிய டிசைன்கள் வடிவகைப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிக்கலான பூக்களின் வேலைப்பாடுகளும், கற்களும், தங்கத்தால் ஆன ஜிகினாக்கள் மற்றும் சிகப்பு பட்டுத்துணியைக் கொண்ட ஜரிகைகளும் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த லெஹேங்காவிற்கு ஏற்றவாறு பெரிய வைரமும், மரகதமும் கொண்ட நெக்லஸ், சோக்கர், தோடுகள் மற்றும் நெற்றிச்சுட்டி ஆகிய நகைகளை அணிந்திருப்பது சரியான பொருத்தமாக உள்ளது.
திருமணத்திற்கு குறைந்த அளவிலான மேக்கப்பையே பயன்படுத்தியிருக்கிறார்கள். இயற்கையான அழகை வெளிப்படுத்தும் வகையில் மேக்கப் போடப்பட்டுள்ளது. ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண உடையானது பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் கலவையாக அமைந்துள்ளது. அவரின் லெஹேங்கா பார்ப்பதற்கு கண்கவர்க் காட்சியாக அமைந்திருந்தது.
ராதிகாவின் லெஹேங்காவை கண்ட பல பேரின் கேள்வி இந்த ஆடையின் விலை என்னவாக இருக்கும் என்பது தான். எனினும் அதை தற்போது சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும் கண்டிப்பாக அதில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகளை பார்க்கும் போது, பலக்கோடிகளை தாண்டும் என்று நம்பப்படுகிறது. இதுவரை யாருமே செய்யாத அளவிலான பொருட்செலவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் நடைப்பெற்றிருப்பதை பார்த்து உலகமே ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.