
தலைமுடி அடர்த்தி மற்றும் முடி உதிர்வு மக்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னைகளாக உள்ளன. உலகெங்கிலும் உள்ள சுமார் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூந்தல் சார்ந்த இந்த பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
உண்மையில், மூன்றில் இரண்டு பங்கு ஆண்கள் 35 வயதிற்குள் ஏதாவது ஒரு வகையில் முடி உதிர்தல் போன்ற கூந்தல் பிரச்னைகளை அனுபவிக்கின்றனர். இருப்பினும் முடி அடர்த்தி குறையும் ஹேர் தின்னிங் (hair thinning) எனப்படும் கூந்தல் மெலிதலுக்கான தீர்வு ஆரோக்கியமான உணவுகளில் உள்ளது.
கூந்தல் மெலிதல் என்றால் என்ன?
கூந்தல் மெலிதல் என்பது முடி தண்டுகளின் விட்டம் நாளடைவில் படிப்படியாக குறைவதாகும், இது காலப்போக்கில் முடிஉதிர்தல் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும். இந்த பிரச்சனை மரபியல் வழி, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் அல்லது மருத்துவ நிலைமைகளால் ஏற்படலாம்.
காரணங்கள்:
வயது அதிகரிக்கும்போது நடைபெறும் இன்வால்யூஷனல் அலோபீசியா எனப்படும் இயற்கை செயல்முறை, வயதுக்கு ஏற்ப முடி மெலிவடையவழிவகுக்கிறது.
அதுபோல ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தலை ஏற்படுத்தும் ஒரு மரபணு நிலையாகும்.
கூந்தலுக்கு கலரிங் செய்வது, பெர்ம்ஸ் மற்றும் ரிலாக்சர்ஸ் போன்றவையும் முடி அடர்த்தியை கணிசமாக குறைக்கும்.
தைராய்டு கோளாறுகள், லூபஸ் அல்லது சிபிலிஸ் போன்ற மருத்துவ நிலைமையின் அறிகுறியாக முடி உதிர்வு அல்லது முடி அடர்த்தி குறைவு இருக்கலாம்.
லித்தியம், பீட்டா-பிளாக்கர்ஸ் மற்றும் வார்ஃபரின் போன்ற சில மருந்துகள் எடுத்து கொள்வதன் பக்க விளைவாக முடிஉதிர்வு ஏற்படும். பிரசவத்திற்குப் பிறகு, தைராய்டு பிரச்னை காரணமாக, அல்லது கருத்தடை மாத்திரை சாப்பிட துவங்கும்போதோ அல்லது நிறுத்துவதாலோ முடி உதிர்தல் ஏற்படலாம்.
நாள்பட்ட மனஅழுத்தம் முடி மெலிவிற்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகள் அடங்கிய டயட் முடி மெலிவு, உதிர்தலை தடுக்க உதவும். உங்கள் உணவில் போதுமான புரதம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின்ஸ் சேர்த்து அதை சமச்சீரான டயட்டாக வைப்பது முடி ஆரோக்கியமாக இருக்க உதவும்.
கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துக்கள்:
ரத்த சிவப்பணுக்கள் உச்சந்தலை மற்றும் மயிர்க்கால் களுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் ரத்த சோகையை ஏற்படும், இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே இருப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் டயட்டில் சேர்க்க வேண்டும்.
முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர ஜிங்க் உதவுகிறது. ஜிங்க் குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்தலை ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் மூலம் சரிசெய்யலாம். பி வைட்டமின்ஸ் குறிப்பாக பயோட்டின் (வைட்டமின் பி7), முடி ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர ஃபோலிக் ஆசிட் உதவுகிறது.