
ரகசியமாக பேசினால் கூட அதை கண்டுபிடித்து விடுபவர்களை எலிக்காது என்று கூறுவார்கள். காதுகளிலும் சங்கு அமைப்பு, மடல் போன்ற அமைப்பு, குடை போன்ற அமைப்பு என்று பல்வேறு வகையான அமைப்புகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
சாதாரணமாக காதுகள் சதை பிடிப்புடன் தொங்கிக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் அதை ஊஞ்சல் காது என்று கிண்டல் அடிப்பவர்கள் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட காதுகளை உடையவர்கள் தீர்க்காயுளுடன், சகல காரிய சித்திகளும் அமையப் பெற்று பாக்கியசாலிகள் ஆகவும், கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது காது பற்றிய குறிப்பு.
ஓடுக்கமாகவும், வட்ட வடிவமாகவும் காதுகளை உடையவர்கள் வர்த்தக துறையில் புகழ்பெற்று பிரபல்யம் உடையவராகத் திகழ்வார்கள். இவர்கள் எவருக்கு உதவினாலும் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இலக்கிய வர்ணனையில் மடல் போன்ற காதுகளுக்கு பெரும் சிறப்பு உண்டு. அப்படி சிறப்பித்து கூறுவதன் காரணம் என்னவென்றால் மடல் போன்ற காதுகளை உடையவர்கள் ஆன்ம சக்தியும் ,யோக சக்தியும் மிக்கவர்களாக நீடித்த ஆயுளுடனும் ,நிறைவான மனதுடனும், மக்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்று புகழுடன் திகழ்பவர்களாக இருப்பதால்தான் அப்படி ஒரு புகழ்ச்சி.
ஒடுங்கிய குடை போன்ற சிறிய காதுகளை உடையவர்கள் மகாத்மாக்களாக, தன்னலமற்ற பொது நல சேவை செய்பவர்களாக இருப்பார்களாம். பிறருக்கு உதவுவதில் ஈடுபட்டு சில நேரங்களில் சங்கடத்தில் மாட்டிக் கொள்பவர்கள் கூட இப்படிப்பட்ட காதுகளை உடையவர்களே. தன்னலம் பாராது பிறர் நலம் காத்து வாழ்பவர்கள் குடை போன்ற காதுகளை உடையவர்கள் என்கிறது ஜோதிடம்.
காதுகள் மிகப்பெரியனவாகவும் அகன்றும் இருப்பவர்களுக்கு ஐஸ்வர்ய தன தானிய லாபங்கள் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களையும், அறக்கட்டளை களையும் நிறுவி சாஸ்வதமான தர்மங்களை செய்வதிலும் ,தெய்வபக்தியிலும் பணத்தை செலவிடுபவர்கள் இது போன்ற மிகப்பெரிய காதுகளை உடையவர்களே. தவம் செய்வதிலும் ,தியான யோகம் செய்வதிலும் மனநாட்டமுடையவர்களாக இருப்பவர்கள் இவர்கள். பிறர் தீங்கு செய்யினும் மன்னித்து விடும் நற்குணம் உடையவர்களாகவும் இருப்பவர்கள் இது போன்ற பெரிய காதுகளை உடையவர்கள்தான்.
சிலரின் காது நுனியைப் பார்த்தால் சங்கு போன்ற அமைப்பு இருக்கும். அது ஒரு நல்ல வித்தியாசத்தை தரும். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றும். இப்படிப்பட்ட சங்கு காதை உடையவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிர்ஷ்டம் உடையவர்களாகவார்கள் என்றும், அன்னதானம் செய்வதிலும், பிறருக்கு துன்பத்தில் உதவி செய்வதிலும் மகிழ்ச்சி அடைபவர்கள் என்றும், சகலரிடத்திலும் அனுகூலமும், அனுதாபமும் கொண்ட தயாள சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மற்றவர்களிடம் அடிமையாக பணியாற்றாமல் சுகபோகமாக வாழ்கின்ற யோகம் இருக்கும். இவர்களில் சிலர் பாரம்பரிய செல்வந்தர்களாக இருப்பார்கள். சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் வந்து கொண்டிருக்கும். இவர்களுக்கு வந்தமையும் மனைவி திருமகளின் அம்சத்தை பெற்ற அதிர்ஷ்டசாலியாக இருப்பாள் என்றும் யானையின் காதுகளை போன்ற பெரிய காதுகளை அமைய பெற்றவர்களை கூறுகிறார்கள்.
எலிகளுக்கு அமைந்துள்ள காதுகளைப் போன்ற செவிகளை உடையவர்கள் மிகவும் சிக்கனவாதிகளாக இருப்பார்களாம்.
அடிகாது அகன்றிருந்தால் ஆயுள்வரை தைரியசாலிகளாக இருப்பார்கள். புதையல் எடுக்கும் யோகமும் இவர்களுக்கு உண்டாகும் என்று காதுகளைப் பற்றிய இலட்சண குறிப்பு உணர்த்துகின்றது.
கிண்ணங்களைப் போன்ற காதுகளை உடையவர்கள் கண்ணியமாக வாழ்பவர்கள் என்றும், நல்ல காரியங்களையே தமது வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருப்பவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகுமாம்.
உங்களின் காது எந்த அமைப்பை கொண்டது என்று உற்று நோக்க ஆரம்பித்து விட்டீர்களா? இதையெல்லாம் தெரிந்து கொள்வதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.