
முடிகொட்டுதல் என்பது பலருக்கும் ஏற்படும் தவிர்க்க முடியாததொரு குறைபாடு. மனஅழுத்தம், மாசடைந்த சுற்றுச்சூழல், பாரம்பரிய குறை என இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணம் என்பதை பலரும் அறிவதில்லை. வலுவான, அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலைப்பெற உடலுக்கு சில குறிப்பிட்ட வைட்டமின்களும் மினரல்களும் தேவைப்படுகின்றன. இவை முழுமையாகக் கிடைக்காதபோது முடி பலமிழந்து உதிர ஆரம்பிக்கிறது. முடி ஆரோக்கியம் காக்க தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
இரும்புச் சத்து:
உடலில் இரும்புச் சத்து குறையும்போது, முடியின் வேர்க்கால்களுக்கு இரத்த சிவப்பு அணுக்கள் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் முடி பலமின்றி உதிர ஆரம்பிக்கும். பசலைக் கீரை, பருப்பு வகைகள், பூசணி விதைகள் மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை உட்கொண்டு இக் குறையைப் போக்கலாம்.
வைட்டமின் D: முடிவளரக் கூடிய நுண்ணறைகளை (follicles) உருவாக்க உதவுவது வைட்டமின் D. இந்தச் சத்து குறையும்போது முடி மெலிதாகும். மேலும் ஆலோபெசியா அரேட்டா (Alopecia Areata) எனப்படும் ஆட்டோ இம்யூன் கோளாறு (autoimmune disorder) உண்டாகி முடி அதிகளவில் கொட்ட ஆரம்பிக்கும். இக் குறைபாட்டை நிவர்த்திக்க தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படுமாறு செய்வது, ஃபேட்டி மீன், முட்டை, செரிவூட்டப்பட்ட பால் பொருட்களை உட்கொள்வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
பயோட்டின் (Vitamin B7): இந்த வைட்டமின் முடி உருவாக்கத்திற்கு தேவைப்படும் கெராட்டின் என்ற புரதச் சத்தின் உற்பத்திக்கு உதவக் கூடியது. உடலில் பயோட்டின் சத்து குறையும்போது முடி மெலிதாகவும், உடையவும், பிளவுபடவும் செய்யும். பயோட்டின் சத்தை அதிகரிக்க முட்டை, தாவர விதைகள்,கொட்டைகள், வாழைப்பழம் மற்றும் ஸ்வீட் பொட்டட்டோ ஆகிய உணவுகளை உண்ணலாம்.
Zinc: முடிக்கால்களைச் சுற்றியுள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். முடியின் வேர்களுக்கருகில் உள்ள நுண்ணறைகள் எண்ணெய் பசையுடன் சிறப்பாக செயல்பட உதவும். சிங்க் சத்து குறையும்போது இந்த நுண்ணறைகள் வறண்டு, சுருங்கி, பலமிழந்து முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். சிங்க் சத்து அதிகரிக்க நட்ஸ், சீட்ஸ், முழு தானிய வகைகள், போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
வைட்டமின் B12 : இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவக் கூடியது வைட்டமின் B12. இதனால் நுண்ணறைகளுக்கு ஆக்ஸிஜன் அதிகம் கிடைத்து ஆரோக்கியமுடன் செயல்படும். இந்த வைட்டமின் குறைந்தால் முடி வளர்ச்சி குறையும். இக்குறை நீங்க உணவில் முட்டை, இறைச்சி, பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் C: கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடியது வைட்டமின் C. கொலாஜன் முடியின் அமைப்பை சிறப்பாக்கும்.
வைட்டமின் C, உடலுக்குள் இரும்புச்சத்து உறிஞ்சப் படுவதற்கும் உதவி புரியும். வைட்டமின் C குறையும்போது முடி வறண்டு காணப்படும். பலமிழக்கவும் உடையவும் செய்யும். கிவி, ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் வகைப்பழங்கள், பெல் பெப்பர் ஆகியவற்றை உட்கொண்டு வைட்டமின் C அளவை சம நிலைப்படுத்தலாம். மக்னீசியம்: மக்னீசியம் தலையில் சருமத்தை
ஆரோக்கியமாய் வைக்கவும், முடியை சுற்றியுள்ள நுண்ணறைகளை புத்துயிர்ப்பிக்கவும் உதவும். இந்த நுண்ணறைகளில் கால்சியம் படிவதை தடுத்து முடியின் வேர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் குறையாமல் சென்றடைய உதவும். அதனால் முடி உதிர்வது குறையும். மக்னீசியம் சத்து குறையாமலிருக்க, முழுதானியங்கள், அவகாடோ, கொட்டைகள், விதைகள், கீரைகள் ஆகிய உணவுகளை உட்கொள்ளலாம்.