ஒவ்வொருவரின் ஸ்கின் டோனுக்கும் ஏற்றவாரு ஃபேஸ் சீரம் பயன்படுத்த வேண்டும். யார் யார் எந்த சீரம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா?
முகத்திற்கான சீரம் என்பது வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பெப்டைடுகள் மற்றும் ஹைலூரோனிக் ஆசிட் போன்றவற்றால் தயாரிக்கக்கூடிய ஒன்று. தற்போது சரும பராமரிப்பு தயாரிப்புகளில் முக்கிய இடம் வகிக்கிறது சீரம். கூந்தலுக்கு நிறைய பேர் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இது முகத்திற்கும் பயன்படுத்துவது மிகவும் அவசியம். உங்களின் சருமத்தில் ஆழமாக ஊடுருவி சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், சரும வறட்சி போன்ற சருமப் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
அனைவரும் சீரம் பயன்படுத்துவது அவசியம் என்றாலும், ஒவ்வொருவரின் சருமத்திற்கு ஏற்றவாரு வெவ்வேறு சீரம் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
ஃபேஸ் சீரத்தின் நன்மைகள்:
இது சேதமடைந்த சருமத்தை சீராக்கும். ஃபேஸ் சீரம் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். பேஸ் சீரத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதோடு, சரும வறட்சி மற்றும் மந்தமான சருமத்துக்கு தீர்வு கொடுக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள ஹைலரானிக் ஆசிட் உள்ள பேஸ் சீரம்களை பயன்படுத்தலாம். இது உங்களின் முகத்தை புத்துணர்ச்சியுடன், ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். சருமத்தை சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து காக்க பேஸ் சீரம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
எப்படி தேர்ந்தெடுப்பது?
ஃபேஸ் சீரம் வாங்குவதற்கு முன் உங்களின் சரும வகையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் நீரேற்றப் பண்புகள் உள்ள சீரம்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சாலிசிலிக் அமிலம், டீ ட்ரீ ஆயில், ரெட்டினோல் அல்லது நியாசினமைடு போன்றவற்றால் செறிவூட்டப்பட்ட பேஸ் சீரம்களை பயன்படுத்த வேண்டும்.
சாதாரண சரும வகைகள் உள்ளவர்கள் வைட்டமின் சி அல்லது ஹைலூரோனிக் அமிலம் கொண்டு செறிவூட்டப்பட்ட பேஸ் சீரத்தை தேர்வு செய்யலாம்.
சருமத்தில் சுருக்கம் உள்ளவர்கள் ரெட்டினோல், பெப்டைடுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற கலவை கொண்ட ஆன்டி ஏஜிங் பேஸ் சீரம்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை:
ஃபேஸ் சீரம் பயன்படுத்துவதற்கு முன்னர் க்ளென்ஸர் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின் பேஸ் சீரம் சில துளிகள் எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, மேல் நோக்கி மசாஜ் செய்யவும். பேஸ் சீரம் உறிஞ்ச குறைந்தது 5 நிமிடங்களாவது ஆகும். நன்றாக உறிஞ்சிய பின்னர் மாய்ஸ்சரைசர் அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.