'புஷ்பா 2 தி ரைஸ்' திரைப்படத்தின் முதல் காட்சியின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர், டிசம்பர் 4-ம் தேதி நடந்த நிகழ்வுகளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை குற்றம் சாட்டவில்லை என்றும், போலீஸ் வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது மகன் இன்னும் கோமா நிலையில் உள்ளது மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகனின் சிகிச்சை குறித்து நடிகரிடமிருந்து முழு ஆதரவைப் பெற்றதாகக் பாஸ்கர் கூறினார்.
அவரது மகன், ஸ்ரீ தேஜ், அல்லு அர்ஜுனின் ரசிகன், முக்கியமாக மகனின் வற்புறுத்தலின் பேரில் தான் இந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் சென்றுள்ளனர் என்று NDTV க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார். "8 வயதான ஸ்ரீ தேஜ் கடந்த 20 நாட்களாக கோமா நிலையில் இருக்கிறான். ஸ்ரீ தேஜ் சில நேரங்களில் கண்களைத் திறக்கிறார், ஆனால் இன்னும் யாரையும் அடையாளம் காணவில்லை. எவ்வளவு காலம் சிகிச்சை எடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார்.
நேற்றைய தினம் தான் புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளர்கள் பாஸ்கர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தனர். தயாரிப்பாளர் நவீன் ரூ. 50 லட்சம் காசோலையை ஸ்ரீ தேஜை சந்தித்தபோது பாஸ்கரிடம் நேற்று வழங்கினார்.
தனது மகளுக்கு, தாயின் மரணம் குறித்து கூறப்படவில்லை என்றும், "ஊருக்குப் போயிருக்கிறாள் என்று சொல்லிவிட்டோம். என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியாது," என்றும் பாஸ்கர் கூறினார்.
மனைவி இறந்த 2-வது நாளிலிருந்து அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் அல்லு அர்ஜுன் என்று பாஸ்கர் கூறினார். மேலும் "நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, அதை எங்கள் துரதிர்ஷ்டம் என்று கருதுகிறோம். அல்லு அர்ஜுன் கைதுக்கு நாங்கள் தான் காரணம் என்று எங்களைத் திட்டுகிறார்கள். கைதுக்காக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டோம். ஆனால் போராடும் வலிமை எங்களுக்கு இல்லை," என்று அவர் கூறினார்.
டிசம்பர் 13-ம்தேதி கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். “வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். கைது செய்யப்பட்டதை நான் அறிந்திருக்கவில்லை, அல்லு அர்ஜுனுக்கும் என் மனைவி இறந்த கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கைதுக்குப் பிறகு பாஸ்கர் கூறினார்.