தலைக்கு ஷாம்பூ போடும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த 6 தப்பை செய்யாதீங்க!
நம்முடைய உடல்நலத்தை ஆரோக்கியமாக பேணிப் பாதுகாக்க தலை குளிப்பது என்பது அவசியமாகும். அதனால் தான் நம் முன்னோர்களும் தலை குளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். தற்போது உள்ள காலக்கட்டத்தில் அவசரமாக தலைக்குளிக்கும் போது நாம் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்கும் போது தலைமுடியை மென்மையாக தேய்க்க வேண்டும். சீக்கிரம் குளிக்க வேண்டும் என்று தலைமுடியை வேகமாக அழுத்தி தேய்ப்பதால், முடியில் வெவ்வேறு திசைகளில் நகர்வு ஏற்பட்டு முடியை சேதப்படுத்தி, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். தலையை துண்டு வைத்து துவட்டும் போதும் தலைமுடியை மென்மையாக கையாள வேண்டியது அவசியமாகும்.
2. தலைக்கு ஹேர் டிரையர் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை வெப்பத்தை அதிகமாக வைத்துக் கொள்ளாமல் அளவாக வைத்து பயன்படுத்துவது முடி உதிர்வை தடுக்கும்.
3. சிலருக்கு சூடான நீரில் தலைக் குளிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் தலைமுடியின் வேர்களில் இருக்கும் பி.ஹெச்சின் அளவை பாதிக்கும். இதனால் தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, முடிந்தவரை தலைக் குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரிலே தலைக் குளிப்பது அவசியமாகும்.
4. சிலர் தலைக்கு ஷாம்பூ பயன்படுத்தும் போது இரண்டுக்கும் மேற்ப்பட்ட முறை பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். இவர்கள் தலையில் அதிகமாக அழுக்கு இருப்பதாக நினைக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது தலையின் மேற்பரப்பில் உள்ள நல்ல பேக்டீரியாக்கள் அழிவதால் முடி வறட்சியாகவும், பாதிப்படையவும் கூடும்.
5. நம்மில் பலர் தலைக்கு ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கன்டீஷனர் பயன்படுத்துவதில்லை. அது அவசியமற்றது என்று நினைக்கின்றனர். ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கன்டீஷனர் பயன்படுத்துவது முடி உதிர்வை குறைக்கிறது.
6. பெண்கள் காலையில் தலைக்குளிக்கும் போது வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஈரமாக இருக்கும் தலைமுடியை சீப்பை வைத்து அப்படியே சீவுவார்கள். இது தலைமுடியை வெகுவாக பாதித்து முடி உதிர்வை அதிகரிக்கும். தலைக்குளித்த பிறகு அவசரமாக சீப்பை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தால், பெரிய பற்கள் இருக்கும் சீப்பை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். அதை முடியில் மிகவும் மென்மையாக பயன்படுத்துவது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இந்த 6 தவறுகளையும் செய்யாமல் இருந்துப் பாருங்கள். உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள்.

