
முகம் கழுவுவது ஒரு சாதாரண பழக்கமாக தெரிந்தாலும், அதனால் நம் சருமத்திற்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம். முகம் கழுவுவதால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் புத்துணச்சி பெறுகிறது. மேலும் பருக்கள், வறட்சி போன்ற பிரச்னையில் இருந்து சருமத்தை காத்து ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது. இருப்பினும், முகம் கழுவுவதிலும் நாம் சில தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அவை என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
1. நம்முடைய சருமத்தை தூசு, வெயில், மாசு போன்றவற்றில் இருந்து பாதுகாக்க சுவர் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதிகமாக முகத்தை தொடர்ந்து கழுவிக்கொண்டேயிருப்பது அதில் பாதிப்பு ஏற்பட்டு சருமத்தில் வறட்சியையும், அரிப்பையும் ஏற்படுத்தும். ஆகவே, ஒரு நாளைக்கு முகத்தை காலை, மாலை என இருவேளை மட்டும் கழுவினால் போதுமானது.
2. சருமத்தில் இயற்கையாகவே சுரக்கக்கூடிய எண்ணெய் பசை வெந்நீர் பயன்படுத்தி முகத்தை கழுவும்போது பாதிப்பு ஏற்பட்டு சுரக்காமல் நின்றுவிடும். இதனால் சருமத்தில் வறட்சி போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, வெந்நீர் வைத்து முகத்தை கழுவுவதை தவிர்த்துவிட்டு மிதமான சூட்டைக் கொண்ட நீரை பயன்படுத்துவது சிறந்தது.
3. முகத்தை கழுவும்போது சருமத்தை மிருதுவாக கையாள வேண்டும். சோப்பு அல்லது கிளென்ஸரை கொண்டு முகத்தில் வேகமாக தேய்ப்பதனால், ஆக்னே, பருக்கள் போன்ற பிரச்னைகள் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, சருமத்தை கையாளுவதில் கண்டிப்பாக பொறுமையும், கவனமும் தேவை.
4. முகத்தை கழுவுவதால் முகத்தில் உள்ள ஈரப்பதம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, முகத்தை கழுவியதும் மாய்ஸ்டரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இதனால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
5. முகம் கழுவுவதற்கு முன் நம் கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், கைகளில் பாக்டீரியா போன்ற கிருமிகள் இருக்கும். இதனால் முகத்தில் பரு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, கட்டாயம் கைகளை கழுவிய பிறகே முகத்தை கழுவத்தொடங்க வேண்டும்.
6. முகம் கழுவிய பிறகு அழுக்கான டவலை பயன்படுத்தினால் பாக்டீரியா போன்ற கிருமிகளால் சருமப்பிரச்னை ஏற்படும். எனவே, சுத்தமான காட்டன் டவலை பயன்படுத்தி முகத்தை அழுத்தி வேகமாக துடைக்காமல் பொறுமையாக துடைக்க வேண்டியது அவசியமாகும்.
7. முகத்தை கழுவும்போது சரியாக கழுவவேண்டும். சரியாக கழுவாமல் சோப்பு அல்லது கிளென்ஸர் நுரைகளை அப்படியே விடுவது சரும தூவாரங்களில் புகுந்து பருக்கள் போன்ற பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். இதனால் முகத்தை ஒருமுறைக்கு இரண்டு முறை நன்றாக கழுவ வேண்டியது அவசியமாகும். இந்த முறைகளை சரியாக கடைப்பிடித்தால், சருமம் ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.