இரவில் பூத்து காலையில் உதிரும் மர்மமான பூ: இதன் கதை உங்களை ஆச்சரியப்பட வைக்கும்!

The amazing Parijata tree
Pavalamalli flower
Published on

ந்து சமயப் புராணங்களின்படி, அமுதத்திற்காக தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட ஐந்து மரங்களில் பாரிஜாத மரமும் ஒன்று. வடமொழியில் பாரிஜாதம் எனப்படும் இம்மரம் தமிழில் பவளமல்லி (Nyctanthes arbor-tristis) என்று அழைக்கப்படுகிறது. பாரிஜாதம் என்ற சமஸ்கிருதப் பெயருக்கு கடலில் இருந்து வெளிவந்தது என்று பொருள். இதனுடைய தொங்கும் கிளைகள் காரணமாக, இது பவளம் போன்ற ஆரஞ்சு குழாய் பூக்கள் இருப்பதால் இம்மரத்தை, ‘துக்க மரம்’ என்றும் சொல்கின்றனர்.

தேவர்களின் தலைவனான இந்திரன் இம்மரத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வளர்த்து வந்ததாகவும், ஸ்ரீ கிருஷ்ணர் தேவலோகத்திலிருந்து இம்மரத்தை பூமிக்குக் கொண்டு வந்தார் என்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ணனின் மனைவியரான சத்தியபாமாவுக்கும், ருக்மிணிக்கும் இம்மரம் குறித்து சண்டை ஏற்பட்டதாகவும், அதைத் தீர்க்கும் வழியில் மரம் பூக்கும் காலங்களில், பவளமல்லி பூக்கள் ருக்மிணியின் தோட்டத்தில் உதிரும் வகையில், மரத்தை சத்தியபாமாவின் தோட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் நட்டு இப்பிரச்னையை தீர்த்ததாகவும் ஒரு கூடுதல் கதையும் உண்டு.

இதையும் படியுங்கள்:
இந்த மந்திரத்தை தினசரி சொன்னால் போதும்: வாழ்வில் துன்பங்கள், தடைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும்!
The amazing Parijata tree

பவளமல்லி தொடர்பாக மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. ‘பாரிஜாதகா’ எனும் இளவரசி சூரியன் மேல் விருப்பம் கொண்டிருந்ததாகவும், சூரியன் அவளை ஏற்காத நிலையில், அவள் தன்னை நெருப்பில் அழித்துக் கொண்டாள் என்றும், அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே பவளமல்லி மரமென்றும் சொல்லப்படுகிறது. மேலும், தன்னைக் கைவிட்ட சூரியனைப் பகலில் கண்டு, இரவில் வருத்தத்துடன் கண்ணீராக வெளியேற்றுகிறாள் என்றும், அந்தக் கண்ணீர்த் துளிகளே பூக்களாக இருக்கின்றன என்றும் சொல்கின்றனர்.

இம்மரம் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்கின்றன. தொங்கும் நாற்கரக் கிளைகளுடன் 10 மீட்டர் உயரம் வரை வளரும் புதர் அல்லது சிறிய மரம் என்று இதனைச் சொல்லலாம். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாகவும் பவள நிறத்திலான காம்பைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. இப்பூகள் 5 முதல் 7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவில் பூத்து காலையில் உதிர்ந்து விடும்.

பொதுவாக, இம்மரமானது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மற்றும் அக்டோபரில் அதிகமாகப் பூக்கின்றது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை பழம் தரும் காலமாக இருக்கிறது. இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும். இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்:
வீட்டிற்கு பாதுகாப்பு கவசம்: திருஷ்டி, பில்லி சூனியத்தை விரட்டும் பசுஞ்சாணம்!
The amazing Parijata tree

இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் ‘பிரம்மதர்ஷன் புஷ்பம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மரத்திலிருந்து விழுந்த பிறகு, தரையில் இருந்து சேகரிக்கப்பட்டு வழிபாட்டில் சமர்ப்பிக்கக்கூடிய சில இனங்களில் இந்தப் பூவும் ஒன்று. மேலும், விரதங்களின்போது கணபதி, சத்தியநாராயணன், சம்பா மற்றும் ஸ்வர்ணகௌரி ஆகியோருக்கு இம்மலர்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

இந்தப் பூக்களிலிருந்து பெறப்படும் ஆரஞ்சு நிற சாயம் பட்டு மற்றும் பருத்தி துணிகளுக்கு வண்ணம் தீட்டப் பயன்படுகிறது. இந்தப் பூக்கள் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. கரடு முரடான இலைகள் மரம் மற்றும் பாத்திரங்களை மெருகூட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது வெட்டப்பட்ட இமயமலை சரிவுகளில் விரைவாக பரவுகிறது. எனவே, காடு வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பட்டை தோல் பதனிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com