சருமத்தை பராமரிப்பதில் வைட்டமின் C சீரம் மிகவும் பிரபலமான பொருட்களில் ஒன்றாக உள்ளது. இது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துமா? யார் யார் இதை பயன்படுத்தக்கூடாது? என்பதற்கான கேள்விகளுக்கு இந்தப் பதிவு பதில் அளிக்கப்போகிறது.
வைட்டமின் சி என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆகும். இது சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது சருமத்தை பிரகாசமாக்கி கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றை குறைக்கிறது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் விட்டமின் சி உதவுகிறது.
வைட்டமின் சி சீரம் எப்படி வேலை செய்கிறது?
வைட்டமின் சி சீரம் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவுகிறது. இது சருமத்தின் நிறமிகளை சமன் செய்து சருமத்தை ஒரே சீராக மாற்றுகிறது. மேலும், இது சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, சருமத்தை இறுக்கமாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
வைட்டமின் சி சீரம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால், முகப்பருவை குறைக்க விரும்புபவர்கள் இதை பயன்படுத்தலாம்.
முகத்தில் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள், கரும்புள்ளிகள் இருப்பவர்களுக்கு வைட்டமின் சி சீரம் நல்லது. மேலும், சருமம் எப்போதும் மந்தமாக இருப்பவர்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
நீங்கள் அடிக்கடி வெளியே செல்பவராக இருந்தால், சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க விட்டமின் சி சீரம் பயன்படும்.
யார் பயன்படுத்தக்கூடாது?
சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு விட்டமின் சி சீரம் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, இத்தகைவர்கள் சரும மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் விட்டமின் சி சீரத்தை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
லேசர் சிகிச்சை அல்லது வேறு ஏதேனும் சரும சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் விட்டமின் சி சீரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
உங்களுக்கு சொல்ல முடியாத வேறு ஏதேனும் சருமப் பிரச்சனைகள் இருந்தால், விட்டமின் சி சீரம் பயன்படுத்த வேண்டாம்.
எப்படி பயன்படுத்துவது?
விட்டமின் சி சீரத்தை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும். மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதற்கு முன் சீரத்தைப் பயன்படுத்துவது நல்ல பலன் கொடுக்கும்.
விட்டமின் சி சீரம் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துமா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ ஆலோசனை மிகவும் முக்கியம். இதை சரியான வழியில் பயன்படுத்தினால் உங்களது சருமம் பிரகாசமாகவும் என்றும் இளமையாகவும் இருக்கும்.