பியூட்டி சலூன் செலவு மிச்சம்! வீட்டிலேயே Nail Art செய்ய எளிய வழிகள்!

Nail Art
Nail Art
Published on

அழகு கலை தற்போது பல உபகரணங்கள் கொண்டு நமது உச்சி முதல் பாதம் வரை அழகை மேம்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் நெயில் ஆர்ட் (Nail Art) எனப்படும் நகக் கலை. அழுக்குகள் இன்றி ஒட்ட வெட்டிய நகங்களே அழகு என்று இருந்த நிலை மாறி இன்று நீளமான மற்றும் அதில் பல்வேறு வண்ணங்கள் பூசி பளபளக்கும் நகங்களே அழகு எனும் நிலை வந்துள்ளது. சரி இந்த நெயில் ஆர்ட்டை வீட்டில் நாமே செய்யலாமா? தாராளமாக. வாருங்கள் நெயில் ஆர்ட் பற்றிய சில விபரங்களை இங்கு காண்போம்.

நகக் கலையின் வரலாறு (The history of Nail Art):

நெயில் ஆர்ட்டின் வரலாறு கி.மு.3000ல் துவங்கியதாக தகவல்கள் உள்ளன. பண்டைய சீனாவில் முதல் நெயில் பாலிஷ் தோன்றியதாகவும் சிவப்பு மற்றும் கருப்பு போன்ற ஆழ்ந்த வண்ணங்களை விரும்பிய பண்டைய எகிப்தியர்கள் மருதாணியையும் (ஹென்னா), சீனர்கள் மெழுகு, தேன், காய்கறி சாயங்கள் மற்றும் ஈஸ்ட் வெண்கரு போன்றவற்றை கலந்து முதல் நெயில் பாலிஷை உருவாக்கி பயன்படுத்தியதோடு தங்க மற்றும் வெள்ளி போன்ற பொருட்களால் செயற்கை நகங்களையும் உருவாக்கியதாகவும் குறிப்புகள் சொல்கிறது. அக்காலத்தில் இது சமூக அந்தஸ்தைக் குறிக்கும் விதமாக இருந்துள்ளது.

நவீன கால நெயில் ஆர்ட் கண்டுபிடிப்பு அந்நாளைய நெயில் வடிவமைப்பாளர்கள் மற்றும் மேனாட்டு (Hollywood) நடிகைகளின் ஆர்வத்தால் வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் வேதியியல் முன்னேற்றங்கள் காரணமாக நெயில் பாலிஷ் உற்பத்தி தொடங்கி 20 ஆம் நூற்றாண்டில் மேம்படுத்தப்பட்ட நெயில் பாலிஷ், Acrylic Nails அறிமுகம் மற்றும் ஜெல் தொழில்நுட்பம் மூலம் இந்த கலை வடிவம் மேலும் கவனம் பெற்றது. 1980கள் மற்றும் 1990களில் நகங்களை சுத்தம் செய்து அழகுபடுத்த பிரெஞ்சு மெனிக்யூர் முறை பிரபலமானது. இவைகளுடன் இன்றைய சமூக ஊடகங்களின் பங்களிப்பால் நெயில் ஆர்ட் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வீட்டில் செய்யக்கூடிய நகக் கலை வகைகள் (Types of Nail Art that can be done at home):

நம் விருப்பப்படி வீட்டில் நெயில் ஆர்ட் செய்யலாம். புள்ளிகள் (Dots), கோடுகள் (Lines), நட்சத்திரங்கள் (Stars), ஃப்ரெஞ்சு டிப்ஸ் (French Tips), மிருகங்களின் தோற்றங்கள் (Animal Prints) மற்றும் வடிவமைப்பு (Abstract designs) ஆகியவை வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய சில நெயில் ஆர்ட் வகைகள் ஆகும். நெயில் பிரஷ், டாட் டிங் கருவி அல்லது வீட்டிலுள்ள பொருட்கள் போன்றவற்றை வைத்து இவற்றை எளிதாகச் செய்யலாம்.

ஒரு டாட் டிங் கருவி அல்லது பென்சிலின் பின்பகுதியைப் பயன்படுத்தி பல்வேறு அளவிலான புள்ளிகளை உருவாக்கலாம்.

மெல்லிய கோடுகள் அல்லது அகன்ற கோடுகளை நெயில் ஆர்ட் பிரஷ் கொண்டு எளிதாக வரையலாம்.

ளிமையான நட்சத்திரங்களை ஒரு சிறிய ஸ்டென்சில் அல்லது நெயில் பிரஷ் பயன்படுத்தியும் நெயில் பாலிஷினால் பல்வேறு கோடுகள் மற்றும் வளைவுகளுடன் கலந்து சுருக்கமான வடிவங்களையும் , நெயில் பிரஷ் அல்லது டாட் டிங் கருவி கொண்டு மாடு அல்லது சிறுத்தையின் புள்ளிகள் போன்ற தோற்றங்களையும் உருவாக்கலாம் . இவைகளுடன் ஃப்ரெஞ்சு டிப்ஸ் (French Tips) எனப்படும் நகத்தின் நுனியில் ஒரு மெல்லிய வெள்ளை கோடு வரையும் கிளாசிக் டிசைனை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். ஒரு அடிப்படை வண்ணத்தை பூசி, அது காய்ந்த பிறகு மற்ற டிசைன்களை செய்ய வேண்டும். அதுதான் ஒன்றோடொன்று இணையாமல் தனித்தன்மை தரும்.

நகக் கலைக்குத் தேவையான பொருட்கள் (Materials needed for Nail Art)

அழகு நிலையம் செல்லாமல் சரியான கருவிகள் மற்றும் சில பயிற்சிகளின் மூலம் வீட்டிலேயே அழகான நெயில் ஆர்ட் டிசைன்களை செய்யலாம். இதற்கு வேண்டிய சிலவற்றை முன்னரே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக பல வண்ணங்களில் நெயில் பாலிஷ்கள். மெல்லிய கோடுகள் மற்றும் நுண்ணிய வடிவமைப்புகளுக்கு தேவையான நெயில் ஆர்ட் பிரஷ், புள்ளிகள் மற்றும் சிறிய வட்டங்களை உருவாக்க டாட்டிங் கருவி (Dotting Tool) எளிமையான மற்றும் துல்லியமான டிசைன்களுக்கு ஏற்ற ஸ்டென்சில்கள் அல்லது ஸ்டிக்கர்கள் இவைகளுடன் வீட்டில் உள்ள சிறிய ஊசிகள், பின் அல்லது ஒரு பழைய பென்சில் கூட பயன்படுத்தி நெயில் ஆர்ட் வடிவங்களை உருவாக்கலாம். பல்வேறு வகையான பிரஷ்கள், டாட் டிங் கருவிகள் மற்றும் ஸ்டென்சில்கள் கடைகளில் தாராளமாக கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
நெயில் கட்டர் நகம் வெட்ட மட்டுமா? பலருக்கும் தெரியாத இதன் 3 பயன்கள்!
Nail Art

ஆரோக்கியமான நகங்களுக்கான குறிப்புகள் (Tips for healthy Nails)

என்னதான் அழகு படுத்தினாலும் ஆரோக்கியமான நகங்கள் இல்லை எனில் பொலிவாக இருக்காது. முதலில் நகங்களை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்க வேண்டும்.

  • உடையாத நகங்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு உண்ணுவது முக்கியம். குறிப்பாக பயோட்டின், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். இது நகங்களை வலுவாக்கும்.

  • நகங்களை அடிக்கடி கடிக்காமல் இருப்பதும், கியூட்டிகல்ஸை (நகத்தை சுற்றியுள்ள தோல்) கவனமாக பராமரிப்பதும் மிக முக்கியம்.

  • பாக்டீரியாக்களுக்கு சாதகமான ஈரமான நகங்கள் தவிர்க்க வேண்டும்.

  • கைகள் மற்றும் நகங்களை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம்.

  • விரல் நகங்களை நேராகவும், கால் நகங்களை வளைந்தும் வெட்டுவது நல்லது.

  • ஈரப்பதமூட்டியபின் நகவெட்டி பயன்படுத்துங்கள்.

  • அடிக்கடி நெயில் பாலிஷ் ரிமூவர் போன்ற இரசாயனங்களில் நகங்களை உட்படுத்துவது நல்லதல்ல.

இதையும் படியுங்கள்:
எந்த நாள் நகம் வெட்டினா நல்லது? சாஸ்திரம் சொல்வது என்ன?
Nail Art
  • பொதுவாகவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நகத்துடன் உடலுக்கு ஒட்டுமொத்த நலம் தரும்.

  • நகங்களின் நிறம், வடிவம் அல்லது அளவில் மாற்றங்கள் ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுகவும், ஏனெனில் இது ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது பிற சுகாதார பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உண்டு.

இதை சரி செய்து ஆரோக்கியமான நகங்களில் செய்யும் நெயில் ஆர்ட்டே சிறந்த லுக் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com