
சமீப காலத்தில் வறண்ட சிக்கு (frizzy) கூந்தல் பெரும் பிரச்னையாக இருக்கிறது. தலைமுடி ஈரப்பதம் இல்லாமல் வறண்டு, உலர்ந்து போய், பார்ப்பதற்கு உறைந்ததுபோல காணப்படுவதை வறண்ட சிக்கு முடி அல்லது பிரிசி ஹேர் என்று அழைக்கிறார்கள். முடி வறண்டுபோய் விடுவதால் எளிதில் உடைந்து போகும் அல்லது முற்றிலும் உதிர்ந்தும் போகும்.
இந்த நிலைக்கு முடி வந்துவிட்டால் ஏராளமான முடிகள் உதிரத் தொடங்கி மோசமான நிலைக்கு கூந்தலை கொண்டு சென்றுவிடும். இந்த நிலையில் கூந்தல் பனியில் உறைந்தது போலவும் பறவையின் கூட்டை போலவும் காட்சி அளிக்கும். கைகளால் தொட்டால் தலைமுடி மென்மை தன்மை இழந்து சொரசொரப்பாக இருக்கும்.
தலைமுடி என்பது கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. இந்த தொகுப்பில் நீரின் முலக்கூறான ஹைட்ரஜனும் உள்ளது. ஹைட்ரஜன் தலைமுடியில் ஈரத்தினை பராமரிக்கிறது. காற்றில் ஈரப்பதம் குறைந்தாலோ, கடும் வெயிலில் அலையும் போதோ தலைமுடியில் உள்ள ஹைட்ரஜன் உள்ளிட்ட மூலக்கூறுகள் ஆவியாகிவிடும். சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாறுபாடு கூட தலைமுடியின் வறண்ட தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இயற்கையிலேயே தலைமுடி ஈரப்பதம் மிகுந்தது. தலையில் இயற்கையாக எண்ணெய், மெழுகு போன்ற திரவம் உற்பத்தியாகி முடியினை ஈரப்பதம் மிக்கதாகவும் மென்மையானதாகவும் வைத்திருக்கிறது. சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு தலைமுடியை அலசும்போது முடியில் உள்ள ஈரப்பதம் போய்விடுகிறது. மேலும் சுடு தண்ணீரில் குளிக்கும்போதும் அந்த ஈரப்பசை தலையை விட்டு போய் விடுகிறது. இதனால் கேசமும் வறண்டு தலையும் வறண்டு விடுகிறது. இது முடி உதிர்தலுக்கு மூலக்காரணமாக உள்ளது.
சில நேரங்களில் நோய் வாய்பட்டவர்களுக்கும் ஊட்டச்சத்து இல்லாமல் முடி வறண்டு விடுகிறது. வயிறு புண், இரைப்பை புண் உள்ளவர்கள் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதில் தாமதம் ஏற்படும் அவர்களின் முடியும் உடைந்து உலர்ந்த கூந்தலாக இருக்கும். முடி வளர்ச்சியில் பயோட்டின், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் டி, அயர்ன், செலீனியம், காலோஜன், காப்பர், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை உடலில் குறையாமல் பாதுகாப்பது அவசியம்.
தீர்வுகள்:
வறண்ட சிக்கு கூந்தலுக்கு சில தீர்வுகள் உள்ளன. உண்ணும் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதாம், கடலை, வெள்ளரி விதை, மீன், முட்டை போன்றவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். சைவ விரும்பிகள் உணவில் பால், தயிர், பன்னீர், கீரைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
வெளியில் போகும்போது தலையை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஒரு மெல்லிய துணியை தலையில் சுற்றி அதன் மேல் ஹெல்மெட் அணியலாம். அதிக நேரம் தலைமுடி வெயிலில் படும்படி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தலைக் குளிப்பதையும் ஷாம்பு போடுவதையும் குறைத்துக் கொள்ளவேண்டும்.
வாரம் ஒருமுறை தலைமுடியை அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் அலசினால் போதுமானது. வெந்நீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தலைமுடிக்கு பாதம் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை பயன்படுத்தினால் மென்மையாகவும் உலராமலும் இருக்கும். கிரீன் டீ, கத்தாழை ஜெல் ஆகியற்றை தலை முடியில் பூசிக்கொண்டால் உலராமல் இருக்கும். தரமான கண்டிஷனர்களையும் தலை முடிக்கு பயன்படுத்தி வறண்ட சிக்கு கூந்தல் இல்லாமல் பராமரிக்கலாம்.