"வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு போகவே இல்லை" - என்ற திரைப்பட வசனம் போல, இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பது இங்கு பலரின் கனவு. வயது முதிர்வை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், சில உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் வயதான தோற்றத்தைத் தள்ளிப் போட முடியும். அந்தவகையில், வயதானாலும் நம் தோற்றத்தை மெருகேற்றி காட்ட உதவும் உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்வோமா?
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:
வைட்டமின் சி ஆனது உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிவி, ஆரஞ்சு, அன்னாசிப்பழம், தக்காளி, ஸ்ட்ராபெரி போன்றவைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம், சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்ள முடியும். சருமத்தில் ஏற்படும் ஹைப்பர்பிக்மென்ட்டேஷன் மற்றும் ஆரம்பகால வயதான தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது. சூரிய ஒளியின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. காயங்களை ஆற்றுவதில் பங்களிக்கிறது. உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த கொலாஜன், சருமம், நகங்கள், முடி, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீர்சத்து நிறைந்த உணவுகள்:
தர்பூசணி, வெள்ளரிக்காய், பீச் மற்றும் கீரைகள் போன்ற நீரேற்ற உணவுகளை எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பதோடு, சரும பராமரிப்பிற்கும் உதவுகிறது. இது, சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது. வறண்ட சருமம் மற்றும் பிற சரும சேதங்களை தடுக்கவும் உதவுகிறது.
ஒமேகா-3 நிறைந்த உணவுகள்:
ஒமேகா-3 என்பது ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களாகும். சால்மன், சியா விதைகள், மத்தி, வால்நட் போன்றவற்றில் ஒமேகா 3 நிறைந்துள்ளது. வறண்ட சருமத்தை போக்க உதவுகிறது. முகப்பரு, கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. முதுமையான தோற்றத்தை தள்ளிப் போட உதவுகிறது.
வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்:
அவோகேடோ, பாதாம், சூரியகாந்தி விதைகள், மாம்பழம், வேர்க்கடலை போன்ற வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும். சரும அரிப்பு மற்றும் வறண்ட சருமத்தை குணப்படுத்துகிறது. அதோடு, வைட்டமின் ஈ சருமப் புற்றுநோய்க்கான அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
துத்தநாகம் நிறைந்த உணவுகள்:
பூசணி விதைகள், கொண்டைக்கடலை, முந்திரிப்பருப்பு, ஓட்ஸ், பச்சைப்பட்டாணி போன்ற துத்தநாகம் நிறைந்த உணவுகள் சருமத்தில் ஏற்படும் புண்கள், அழற்சி, தடிப்புகள், பருக்கள் போன்ற பிரச்னைகளுக்கான எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன.