உணவுகளை புளிக்க வைத்து அதாவது நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்தி சாப்பிடும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. உணவுப் பொருள்களில் பாக்டீரியா, பூஞ்சை அல்லது ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்களை வளர விடும் முறைக்கு புளிக்க வைத்தல் அல்லது நொதிக்க வைத்தல் என்று பெயர். இவ்வாறு செய்யும்போது உணவில் உள்ள சர்க்கரையானது ஆசிட் அல்லது ஆல்கஹால் போல மாறுகிறது. இந்த செயல்முறையானது, உணவின் சுவையை அதிகரிப்பதோடு, அதிலுள்ள ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. மேலும், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வழங்குகிறது. புளிக்க வைத்த உணவுகளை உண்பது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என சமீத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் காணப்படும் புளிக்க வைத்த உணவுகளையும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளையும் இந்தப் பதிவில் காணலாம்.
இட்லி:
தமிழகத்தின் பிரதான காலை உணவாக இட்லி திகழ்கிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளதால் எளிதான செரிமானத்திற்கும், உடல் எடையை பராமரிப்பதற்கும் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
பழைய சோறு:
பழைய சோற்றில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகின்றன. நொதித்தல் செயல்முறையால் மேம்படுத்தப்பட்ட செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுவதற்கும் உடலின் திறனை மேம்படுத்துவதற்கும் உதவி புரிகிறது.
தோசை:
தோசையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்களை சமநிலையில் வழங்குகிறது. காலை வேளையில், சிறந்த ஆற்றலைத் தரும் உணவாக தோசை விளங்குகிறது. அதோடு எளிதில் ஜீரணமாகக் கூடியது.
ராகி கூழ்:
ராகி கூழில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஊட்டமளிருக்கிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும் புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
தயிர்சாதம்:
தயிர்சாதம் குறிப்பாக கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாகும். ஏனெனில், இதில் உள்ள நீரேற்றப் பண்புகள் கோடைகாலத்தில் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் உள்ள புரோபயாடிக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது. தயிர்சாதம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குகிறது.
எனவே, இதுபோன்ற புளித்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மேம்படுத்தப்பட்ட செரிமானம், அதிக நோய் எதிர்ப்பு சக்தி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல், இதய ஆரோக்கியம் மற்றும் நல்ல மனநலம் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.