

பருவமழை தொடங்கி வானிலை மாற்றம் காரணமாக நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். குறிப்பாக மழைக் காலத்தில் தோல் தொற்றுகள் மற்றும் சருமப் பிரச்னைகள் அதிகம் எழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே சில எளிய ஆரோக்கிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் நம் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.
மழைக்காலங்களில் சருமம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படக்கூடும். இதன் மூலம் தேமல், அரிப்பு, முகப்பரு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இவற்றை தவிர்ப்பதற்கு சருமத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்கள்:
மழைக்காலத்தில் எண்ணெய் சருமத்தை பராமரிக்க வழக்கமாக முகத்தை சுத்தப்படுத்துதல், டோனர் பயன்படுத்துதல், சருமம் ஆரோக்கியமுடன் இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது இயற்கையான பொருட்களைக் கொண்டு ஸ்கிரப் செய்வது போன்றவற்றை செய்யலாம். அதிக மேக்கப்பை இந்த சமயத்தில் தவிர்த்து விடலாம். மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகளைத் தடுத்து சருமத்தை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியடனும் வைத்திருக்க உதவும்.
வறண்ட சருமத்திற்கு:
மழைக்காலத்தில் சன் ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் தேவையில்லை என்று பலர் தவறாக எண்ணுகிறார்கள். ஆனால் மழைக்காலத்தில் சரும வறட்சி ஏற்படாமல் இருக்க மாய்ஸ்சரைசர்கள் அவசியம். வறண்ட சருமத்தை பாதுகாக்க மென்மையான சுத்திகரிப்பான்களை பயன்படுத்தலாம். லேசான மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சீரம்களை பயன்படுத்துவதுடன், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் வேண்டும். ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களை தவிர்த்து, இயற்கையான மற்றும் ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்துவதும் வறண்ட சருமத்திற்கு நல்லது.
மிருதுவான சருமத்திற்கு:
மிருதுவான சருமத்திற்கு முகத்தை லேசான கிளென்சர் கொண்டு தினமும் இரண்டு முறை சுத்தம் செய்யலாம். டோனர் மற்றும் ஆல்கஹால் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் மற்றும் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை அகற்றுவதும் அவசியம்.
வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
உதடுகளுக்கான குறிப்பு:
மழைக்காலத்தில் உதடுகள் வறண்டு வெடிப்புகள் ஏற்படும். SPF உள்ள லிப் பாம்களைத் தடவுவதன் மூலம் உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க முடியும். உதடுகளை நாக்கால் ஈரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது உதடுகளை உலரச்செய்யும். இறந்த சருமத்தை அகற்றுவதற்கு வாரத்திற்கு ஒரு முறை உதடுகளை மெதுவாக எக்ஸ்ஃபோலியேட் செய்யவும். பின்னர் மென்மையான மிருதுவான உதடுகளுக்கு லிப் பாம்களை பயன்படுத்தவும். நீர் புகா லிப் லைனர் மற்றும் லிப் பாம்களை பயன்படுத்தவும்.