

ஏதாவது விசேஷத்திற்கு செல்லவேண்டும் என்றால் சற்று கூடுதலாக அழகுபடுத்திக்கொள்ள விரும்புவது அனைவரின் ஆசை. அப்படி பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் பளிச்சென்று நம்மை வெளிப்படுத்தி காட்டவேண்டும், அழகு சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு நம் உடலை எப்படி தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
போஷாக்கு நிறைந்த ஆகாரத்தை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அழகுக்கு அழகு சேர்க்க முடியும். சத்து இல்லாத வறண்ட உடலில் என்ன அழகு செய்தாலும் எடுபடாது. ரிஷிகளும் முனிவர்களும் தேஜசுடன் இருக்கிறார்கள் என்கிறோமே காரணம்?
பச்சைக் காய்கறிகளும், பழங்களும், சலனம் இல்லாத மனமும்தான். ஆக முக்கியமாக நலத்திற்கும் அழகுக்கும் அடிப்படைத் தேவை இவைகள்தான்.
இரவில் தூங்கும்பொழுது நன்றாக குளித்து, சுத்தமான ஆடை உடுத்தி சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு நன்றாகப் படுத்துத் தூங்கி எழுந்தால் முகமே பளபளப்பாகிவிடும். இதுபோன்ற முகத்திற்கு மேக்கப் போடுவதற்கு அதிகப்பிரயத்தனம் பட வேண்டியது இல்லை. பால் ஏடு, கஸ்தூரி மஞ்சள், கிளிசரின் இவற்றை நன்றாக கலந்து முகத்தில் மசாஜ் செய்து தடவி, பின்னர் கடலை மாவு அல்லது பயத்த மாவு போட்டு முகத்தை கழுவினால் பளபளப்போ பளபளப்புதான்.
பச்சைப்பயறு மாவுடன் கோதுமைத் தவிட்டை கலந்து தேய்த்து குளித்து வந்தால் உடலில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதுடன் புதிய கரும்புள்ளிகள் தோன்றாமலும் இருக்கும். அதனால் எப்பொழுதும் பளபளப்பான தேகத்தைப் பெறலாம். இதுபோல் தினசரி அழகுக் குறிப்பை பயன்படுத்தும் இந்த கை, கால்களில் மருதாணி போட்டுப்பாருங்கள் பளிச்சென்று இருக்கும்.
சிலர் அவசர அவசரமாக ஏதாவது விசேஷத்திற்கு செல்லவேண்டும் என்றால் புருவங்களை ரேசர் கொண்டு முடியை அகற்றுவார்கள். அதுபோல் செய்யும்பொழுது அந்த அவசரம் ஆபத்தில் கூட கொண்டு போய்விடும். சில நேரம் ரேசர் கண் புருவங்களில் கிழித்து ரத்தம் வருவதும் உண்டு. அது ஆறுவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும்.
மேலும் வேர்க்கால்கள் கடினப்படுவதோடு முடியின் வளர்ச்சியும் துரிதப்படுத்தப்படும். இதை விடுத்து புருவத்தில் முடியை த்ரெட்டிங் மூலம் அகற்றும்போது வலி இருந்தால் சிறிது சுடுநீரில் நனைத்து பஞ்சை கொஞ்ச நேரம் முடி மீது வைக்கவேண்டும். அது வேர் கால்களை மிருதுவாக்குவதுடன், உடனே எடுத்தாலும் வலி தெரியாது.
டை போடும் முன் சிறிதளவு புளி உப்பு சேர்த்து கரைத்து திக்கான கரைசலை அல்லது எலுமிச்சை பழச்சாறுடன் சேர்த்த கரைசலை ரெடியாக ஒரு கப்பில் வைத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தால் 'கறை பட்டாலும் வெகு சுலபமாக இந்தக் கலவையைப் பூசி சோப்பினால் கழுவினால் கறை போய்விடும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலுப்புப்பட்டால் கறை அப்படியே தெரியும்.
ஆதலால் செய்வதற்கு முன் எப்படி செய்தால் எளிமையாக செய்யலாம். அது எடுப்பாக தெரிவதற்கு எதையெல்லாம் செய்யலாம். செய்யக்கூடாது என்று தெரிந்து வைத்துக்கொண்டு செய்தால் சீக்கிரமாகவும் அழகுபடுத்திக் கொள்ளலாம். அது நல்ல அழகுடனும் நம்மை மிளிற வைக்கும்.