உங்களது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க எப்போதும் விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்கள்தான் தேவை என்பதில்லை. இயற்கையே நமது சருமத்தை அழகாக ஒளிரச்செய்ய அற்புதமான விஷயங்களை படைத்துள்ளது. அதில் பழங்களும் அடங்கும். உங்களது அழகை மேம்படுத்த செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயங்களில் ஃப்ரூட் பேஷியல் என்பது மிகவும் பயனுள்ள வழிமுறையாகும். இந்தப் பதிவில் வீட்டிலேயே எளிதாக எப்படி ஃப்ரூட் பேஷியல் செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
1. உங்கள் முகத்தில் இதுபோன்ற பேசியல் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பும், சுத்தமாக கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சருமத்தை இயற்கையான ஸ்கிரப் பயன்படுத்தி இறந்த சரும செல்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ளவும். அல்லது சாதாரணமாக முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர வைப்பதும் நல்லதுதான்.
2. சரியான பழத்தைத் தேர்ந்தெடுங்கள்: உங்களது சருமத்திற்கு வெவ்வேறு விதமான பழங்கள் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்குகின்றன. எனவே உங்கள் சரும வகை மற்றும் அதில் இருக்கும் பாதிப்புகளுக்கு ஏற்ற பழங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, பி மற்றும் இ நிறைந்துள்ளதால், சருமத்திற்குத் தேவையான ஊட்டமளித்து ஈரப்பதமாக்கி மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும். அவற்றில் உள்ள சில என்சைம்கள் சருமத்தை பிரகாசமாக மாற்ற உதவும்.
பப்பாளி பழத்தில் உள்ள இயற்கையான நொதிகள், சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளதால் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முகத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கிறது.
ஸ்ட்ராபெரி பழங்களில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து, கருமை நிறத்தை மறைத்து, சருமத்தை ஒளிரச் செய்கிறது.
3. இதில் எதையாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்து அதை மென்மையான பேஸ்டாக பிசைந்து மாஸ்க் தயாரிக்கவும். கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றத்திற்காக தயிர் அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதை உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
4. ஃபேஸ் மாஸ்க் நன்றாக முகத்தில் ஊறியதும், அதை மெதுவாக வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். ஃபேஸ் மாஸ்கை நீக்கும்போது, அதிகமாக அழுத்தி தேய்க்கக்கூடாது. இது உங்களது சருமத்தை பாதிக்கலாம்.
5. இறுதியாக உங்களது சருமத்திற்கு ஏற்ற மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதால், நீங்கள் செய்த ஃப்ரூட் பேஷியல் நல்ல பலனைக் கொடுக்கும். இது பழத்தின் எல்லா நன்மைகளும் சருமத்திற்குள் ஊடுருவ உதவும்.
மேலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க வெளியே செல்வதற்கு முன் சன் ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதிர்கள்.