

Garlic for hair growth: இன்றைய காலகட்டத்தில் முடி கொட்டுவதைத் தடுக்க மக்கள் பலவிதமான வீட்டு வைத்தியங்களை இணையத்தில் தேடி முயற்சிக்கின்றனர். குறுகிய நேர வீடியோக்களில் வரும் முந்தைய பிந்தைய படங்களைப் பார்த்து நாமும் இதைச் செய்து பார்க்கலாம் எனப் பலரும் நினைக்கிறார்கள். அதில் மிக வேகமாகப் பரவி வரும் ஒரு விஷயம்தான் தலையில் பூண்டு தேய்த்தால் முடி வளரும் என்பது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்தக் குறிப்பிற்குப் பின்னால் உள்ள உண்மையான அறிவியல் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் உண்மை!
பூண்டை அரைத்து தலையில் தேய்த்தால் வழுக்கையில் முடி முளைக்கும் என இணையத்தில் வரும் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், அறிவியல் ரீதியாக இது முற்றிலும் தவறான ஒரு புரிதலாகும். 2023 ஆம் ஆண்டில் கியூரஸ் (Cureus) என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (US National Library of Medicine) அங்கீகரித்த இந்த ஆய்வில், பச்சைப் பூண்டை தலையில் தேய்ப்பதைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை.
பூண்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எக்ஸோசோம்கள் (Exosomes) முடி வளர்ச்சியில் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆய்வகத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் எலிகளின் மீது மட்டுமே அவர்கள் சோதனை செய்தார்கள்.
எலிகளின் மீது நடந்த சோதனைகள்!
எக்ஸோசோம்கள் என்பவை செல்களில் இருந்து வெளியாகும் மிகச்சிறிய துகள்கள் ஆகும். இவை செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளப் பெரிதும் உதவுகின்றன. விஞ்ஞானிகள் இந்த துகள்களைப் பிரித்தெடுத்து, ஆறு வாரங்கள் எலிகளுக்குக் கொடுத்து சோதனை செய்தனர். இதில் எலிகளின் முடி வேர்க்கால்கள் சற்று அடர்த்தியாக மாறியது தெரியவந்தது.
முடி வளர்ச்சிக்கு உதவும் டபுள்யூஎன்டி/பீட்டா-கேடனின் (Wnt/β-catenin), விஇஜிஎஃப் (VEGF) மற்றும் பிடிஜிஎஃப் (PDGF) போன்ற உயிரியல் பாதைகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இது முற்றிலும் விலங்குகளிடம் மட்டுமே நிரூபிக்கப்பட்ட ஒரு ஆய்வாகும். இதற்கும் சமையலறையில் இருக்கும் பூண்டிற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
பச்சை பூண்டை தேய்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள்!
ஆராய்ச்சியில் எக்ஸோசோம்களைப் பயன்படுத்தினார்கள் என்பதை மறந்துவிட்டு, பலரும் சமையலறையில் உள்ள பூண்டை நசுக்கி நேரடியாகத் தலையில் தேய்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு செயலாகும். பச்சைப் பூண்டில் உள்ள காரத்தன்மை மண்டையோட்டுச் சருமத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும்.
இதனால் சருமத்தில் கடுமையான தீக்காயங்கள், அலர்ஜி மற்றும் சில தோல் வியாதி வர அதிக வாய்ப்புள்ளது எனப் பல மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் முடி உதிர்வு என்பது மரபணுக்கள், வயதாகுதல் மற்றும் ஹார்மோன்கள் சார்ந்தது. எனவே எலிகளுக்குக் கிடைத்த முடிவு மனிதர்களுக்கும் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது.
பூண்டை நேரடியாகத் தலையில் தேய்ப்பதால் முடி வளரும் என்பதற்கு எந்தவொரு மருத்துவ ஆதாரமும் கிடையாது. முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இணையத்தில் வரும் செய்திகளைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இது உங்களின் சருமத்தை வீணாக்குவதுடன் முடி கொட்டுதலை மேலும் அதிகமாக்கிவிடும். பூண்டு என்பது சமையலுக்கு மட்டுமே, முடி வளர்ப்பதற்கு அல்ல என்பதைப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.