

சரக்கொன்றை - Golden Shower Flower என்பது சித்திரை மாதத்தில் தங்கச் சரங்களாகப் பூத்துக் குலுங்கும் ஒரு தெய்வீக மலராகும். சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் இதன் பூக்கள், இலைகள் மற்றும் பட்டை ஆகியவை சரும நோய்களைக் குணப்படுத்த மிக முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சரக்கொன்றை மலரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு (Anti-bacterial) மற்றும் பூஞ்சை எதிர்ப்பு (Anti-fungal) குணங்கள் சருமத்திற்குத்தரும் அற்புதமான 4 அழகு குறிப்புகளும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்துவதற்கான குறிப்புகளும் இதில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
1. முகப்பரு மற்றும் தழும்புகளை விரட்டும் சரக்கொன்றை மலர் மற்றும் வேம்பு வைத்தியம்:
முகத்தில் தீராத பருக்கள், கட்டிகள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை மாற்ற இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது.
அதற்கு நாம் செய்ய வேண்டியது,
புதிய சரக்கொன்றை மலர்கள் ஒரு கைப்பிடி,
கொழுந்து வேப்பிலை 5, கஸ்தூரி மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி எடுத்து சரக்கொன்றை மலரையும், வேப்பிலையையும் சிறிதளவு தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து முகப்பரு உள்ள இடங்களில் தடிமனாகத் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் பருக்கள் உடனடியாகக் கட்டுப்படும், கரும்புள்ளிகள் மறையும்.
2. தேமல் மற்றும் பூஞ்சைத் தொற்றுகளை வேரறுக்கும் சரக்கொன்றை மலர் விழுது:
வெயிலினால் ஏற்படும் பூஞ்சைத் தொற்று (Fungal infections), தேமல் அல்லது தோலில் ஏற்படும் அரிப்பிற்கு இந்த மலர் மிகச்சிறந்த தீர்வு. அதற்கு நாம் செய்ய வேண்டியது,
சரக்கொன்றை இதழ்கள் 1 கைப்பிடி, குப்பைமேனி இலை 1 கைப்பிடி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி எடுத்து, பூக்களையும் குப்பைமேனி இலையையும் எலுமிச்சை சாறு சேர்த்து விழுதுபோல் அரைத்து, தேமல் அல்லது அரிப்பு உள்ள தோல் பகுதிகளில் இதனைத்தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது தோலின் நிறம் சீராகும், பூஞ்சைத் தொற்றுகள் வேரினில் இருந்து அழியும்.
3. இளமையான மற்றும் இறுக்கமான சருமம் தரும் சரக்கொன்றை மலர் ஆன்டி-ஏஜிங் பேக்:
சரக்கொன்றை மலர்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமச் சுருக்கங்களைப் போக்கி, தோலை இறுக்கமாக்க உதவும். அதற்கு தேவையான பொருட்கள் உலர்த்திய சரக்கொன்றை இதழ்களின் தூள் 1 தேக்கரண்டி, பாசிப்பயறு மாவு 1 தேக்கரண்டி
பசும்பால் (காய்ச்சாதது) தேவையான அளவு எடுத்து
கொன்றைப்பூ தூளையும், பாசிப்பயறு மாவையும் பாலுடன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். நன்றாக உலர்ந்ததும் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவிவர முகம் பளபளப்பாக மாறும், தோலில் தொய்வு ஏற்படுவது தடுக்கப்படும்.
4. சரும எரிச்சல் மற்றும் வியர்க்குருவிற்கான குளியல் பொடி:
கோடைக்காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, உடல் துர்நாற்றம் மற்றும் சரும எரிச்சலைத் தடுக்க இந்த மலரை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை: சரக்கொன்றை மலர்களை நன்றாக அரைத்து உடல் முழுவதும் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். அல்லது நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான மூலிகைக் குளியல் பொடியுடன் (Nalangu Maavu) இந்த மலர்களை உலரவைத்துத் தூளாக்கிச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்பது உறுதி.
வீட்டருகே கொட்டும் மலர்களை சேகரித்து இப்படி (பொடி) செய்து பயன்படுத்தியது உண்டு. பணிக்கு செல்லும் பெண்மணிகள் மற்றும் நேரம் இல்லாதவர்கள் வார இறுதிகளில் ஒருநாள் மட்டும் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திற்கு ஆழமான ஊட்டமளிக்கவும், வாராந்திர சோர்வை நீக்கவும் இந்த பேக் உதவும்.
அதற்கு தேவையான பொருட்கள்:
சரக்கொன்றை பூ விழுது (அரைத்தது) அல்லது பூ அரைத்த சாறு 2 தேக்கரண்டி, பாசிப்பயறு மாவு அல்லது கடலை மாவு 1 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் (பெண்களுக்கு) 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் மாவு மற்றும் மஞ்சளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் புதிய சரக்கொன்றை பூ விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (தேவையெனில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்க்கலாம்). இந்த விழுதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பேக் நன்றாக உலர்ந்ததும், கைகளில் சிறிதளவு தண்ணீர் தொட்டு, முகத்தை மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
இதனால் கிடைக்கும் வாராந்திர நன்மைகள்:
நிறமாற்றம் நீங்கும்: வாரம் முழுவதும் வெயிலில் அலைவதால் ஏற்படும் கருகருப்பு (Sun Tan) மற்றும் முழங்கை, கழுத்துப் பகுதிகளில் உள்ள கறைகள் நீங்கி சருமம் ஒரே நிறமாக மாறும்.
பருக்கள் வராது: வாரத்திற்கு ஒருமுறை இந்த கிருமிநாசினி பூவை முகத்தில் போடுவதால், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, புதிய பருக்கள் தோன்றுவது தடுக்கப்படும்.
அரிப்பு மற்றும் வியர்க்குரு நீங்கும்: இந்த மலரை உடலுக்கும் தேய்த்துக் குளித்து வர, கோடைக்கால வியர்க்குரு மற்றும் தோலில் ஏற்படும் அரிப்புகள் முழுமையாகக் கட்டுப்படும்.
ஒரு எளிய குறிப்பு: உங்களுக்குப் புதிய பூக்கள் கிடைக்காத பட்சத்தில், கொன்றை பூக்களை நிழலில் உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
இந்தப் பதிவில் உள்ள எளிய இயற்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இரசாயனக் கலவைகளின் பக்கவிளைவுகள் ஏதுமின்றி, கோடைக்கால வெயிலால் ஏற்படும் கருகருப்பு மற்றும் வியர்க்குரு நீங்கி, பட்டுப் போன்ற மிருதுவான மற்றும் தங்கம் போல் ஜொலிக்கும் ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெற முடியும்.