
பாதங்களில் லேசாக வெடிப்புகள் தோன்றும் பொழுதே அதனை சரி செய்துவிட்டால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டால் பாதங்களில் வறட்சி காரணமாக வெடிப்பு உண்டாகும். அதேபோல் உடல் எடை அதிகமாக இருக்கும் பொழுது அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்புகள் உண்டாகும். இதற்கு உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதும், உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருவதும் அவசியம். வயதாகும் பொழுது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைந்து எளிதில் வறண்டு போகும். இதனாலும் வெடிப்புகள் உண்டாகும்.
நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தின் மீது சிறிதளவு அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வெதுவெதுப்பான நீரில் தினமும் பாதத்தை நன்கு கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
மருதாணி இலைகளுடன் சிறிது உருண்டை மஞ்சள் கிழங்கை தட்டி சேர்த்து அரைத்து பாத வெடிப்புகள் உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவிட வெடிப்புகள் மறையும். இதை வாரத்துக்கு 2 நாட்கள் என செய்துவர நல்ல குணம் தெரியும்.
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு வேப்ப எண்ணெய் கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வர குணம் தெரியும்.
சின்ன வெங்காயத்தை அரைத்து அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குழைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பற்று போடவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வெடிப்புகள் நீங்கி சருமம் மிருதுவாகும்.
பாதங்களின் வறட்சியை போக்க சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் வெடிப்புகள் குறைந்து சருமம் மிருதுவாகி வெடிப்புகள் விரைவில் மறையும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கால்களை நன்கு கழுவி உலர்ந்ததும் சிறிதளவு விளக்கெண்ணெய் தடவி வர பாத வெடிப்பு ஏற்படாது. விளக்கெண்ணெய் குளிர்ச்சி நிறைந்தது. இதனைத் தடவி வர உடல் சூட்டினால் ஏற்படும் பாத வெடிப்புகள் விரைவில் குணமாகும்.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதில் பாதங்களை சிறிது நேரம் வைக்கவும். பிறகு பாதங்களை நன்கு தேய்த்து சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் தடவி வர வெடிப்புகள் மறையும்.
பெட்ரோலியம் ஜெல்லி, கற்றாழை க்ரீம் போன்றவற்றை மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, கடுமையான வலியுடன் வெடிப்புகள் காணப்படும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு கால் முழுவதும் தொற்று பரவாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வெடிப்புகள் அதிகம் உள்ளவர்கள் திறந்த நிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிவது நல்லது.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெதுவெதுப்பான வெந்நீரில் கல் உப்பு, சிறிது ஷாம்பு சேர்த்து அதில் பாதங்களை வைத்து மசாஜ் செய்யவும். பிறகு பாதங்களை ஈரம் போக துடைத்து சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்ய வறண்ட செல்கள் நீங்கி மென்மையாவதுடன் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.
ஆயில் மசாஜ் செய்வது பாதங்களையும், கால் விரல்களையும், குதிகாலையும் மிருதுவாக்கி வறண்ட வெடிப்புகளை போக்க உதவும்.