
முல்தானி மிட்டியுடன் நம் சருமத்தின் வகைக்கேற்ப கலவைகளைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை நன்கு அலம்பி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்பு முல்தானி மிட்டியை தேவையான பொருட்களுடன் கலந்து மென்மையாக பேஸ்ட் தயாரிக்கவும். பளபளப்பான சருமத்தைப் பெற முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர், தேன், தயிர், பால் போன்ற பொருட்களை கலந்து ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம்.
பளபளப்பான சருமத்திற்கு
முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டர் சருமத்தை மென்மையாக்கி நல்ல நிறம் கொடுக்கும். முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி பிரகாசமாக்கும். இரண்டையும் கலந்து மென்மையான பேஸ்டாக்கி, அதனை கண்கள் மற்றும் உதடு பகுதியைத் தவிர பிற பகுதிகளில் தடவி விடவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவி வர பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்துவது சருமத்தை சுத்தப்படுத்தி, எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும்.
சாதாரண சருமத்திற்கு:
முல்தானி மிட்டியை தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டி மற்றும் தேன்:
எண்ணெய் பசை சருமத்திற்கு முல்தானி மிட்டியுடன் ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போல கலக்கி முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி துளைகளை இறுக்க உதவும்.
தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசராக செயல்படுகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் இயற்கையான பளபளப்பை கொடுக்கவும் செய்கிறது.
முல்தானி மிட்டி மற்றும் தயிர்:
வறண்ட சருமத்திற்கு முல்தானி மிட்டியுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவவும். ஃபேஸ் பேக் முழுவதும் உலரவிடாமல் சிறிது ஈரப்பதம் இருக்கும் பொழுதே கழுவுவது நல்ல பலனைத்தரும்.
இந்தக் கலவை சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை கட்டுப்படுத்துவதுடன், இறந்த செல்களையும் நீக்கும். சருமத் துளைகளை இறுக்கி பருக்கள் மற்றும் கரும் புள்ளிகள் வராமல் தடுக்கும்.
முல்தானி மிட்டி மற்றும் பால்:
ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி பவுடருடன் ஒரு தேக்கரண்டி பால் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காயவிடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விட சருமத்தை சுத்தபடுத்துவதுடன் முகப்பரு மற்றும் கரும் புள்ளிகளைப் போக்கும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். பால் சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்கும். சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு
முல்தானி மிட்டி மற்றும் எலுமிச்சை சாறு:
ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி பவுடருடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிடவும்.
எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க உதவும். சருமத்துளைகளை இறுக்குவதுடன் சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு
முல்தானி மிட்டி மற்றும் சந்தன பொடி:
ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி பவுடருடன் ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி, சிறிது பால் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். சந்தனப் பொடி சருமத்தை குளிர்ச்சியாக்கும். சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பளபளப்பான தோற்றத்தை கொடுக்கும்.
சந்தன பொடியை முல்தானி மிட்டியுடன் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகளைப் போக்கி சருமத்தை சுத்தப்படுத்தும்.
முல்தானி மிட்டி மற்றும் வேப்ப இலை பொடி
வேப்ப இலை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு ஏற்றது. முல்தானி மிட்டியுடன் வேப்ப இலைப் பொடியை சேர்த்து பயன்படுத்தும்போது எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதுடன், முகப்பருவையும் போக்கும். இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றி சரும பிரச்னைகளை தீர்க்கும்.
குறிப்பு:
எலுமிச்சைசாறு அல்லது தயிர் போன்றவற்றை முல்தானி மிட்டியுடன் சேர்த்து பயன்படுத்தும்போது சருமத்தில் ஏதேனும் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.