ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!

ஆண்கள் சரும பாதுகாப்பு...
ஆண்கள் சரும பாதுகாப்பு...

தொகுப்பு: மதுவந்தி

பெண்களும் அழகும் என்றைக்கும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செல்லும். பொதுவாக, ஆண்கள் தங்களை அழகுடன் ஒன்றுபடுத்திப் பார்க்க மாட்டார்கள்; கம்பீரம், வீரம் போன்றவற்றோடு தங்களை ஒப்பிடவே விரும்புவார்கள். ஆனால், தற்போதைய சூழல் வேறு. பெரும்பான்மையான ஆண்களும் தங்களின் சருமத்தையும் உடலையும் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் சருமம் எளிதில் சேதமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு ஏற்படும் சருமம் மற்றும் முடி தொடர்பான தீங்குகளிருந்து ஆண்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இங்குப் பார்க்கலாம்.

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

* ஒருவரின் முதல் அடையாளம் அவருடைய முகம்தான். அதனை நாம் எப்பொழுதும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கும் பெண்களைப்போலவே முகத்தின் இயல்பு மாறுபடும். ஒரு சிலருக்கு இயல்பாகவே முகத்தில் எண்ணெய் சுரப்பது அதிகம், அவர்கள் எண்ணெய் சுரப்பதைக் கட்டுக்குள் வைக்குமாறு உருவாக்கப்பட்டுள்ள ஃபேஸ்வாஷை பயன்படுத்த வேண்டும். சிலருக்கோ முகத்தில் இருக்கும் சருமம் வறண்டு காணப்படும், அவர்கள் மாய்ஸ்சரைசர் கலந்த ஃபேஸ்வாஷை உபயோகிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை உபயோகிக்கும்பொழுது, முகம் பளிச்சிடும்.

Visible difference
Visible difference

* அடுத்து தலைமுடிக்கு வருவோம். பெரும்பான்மையான ஆண்களுக்குத் தலையில் எண்ணெய்த் தேய்ப்பது பிடிப்பதில்லை. அவர்கள் வாசனை சேர்க்கப்பட்ட  ஆல்மண்ட் எண்ணெய், ஆல்மண்ட் ட்ராப்ஸ் ஆயில் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு சிலர் அறவே எண்ணெய்யை வெறுப்பார்கள். அவர்கள் ஜெல் அல்லது கிரீம் அடிப்படையாகக்கொண்டு தயார் செய்யப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தி தங்களின் முடியை அழகு செய்துகொள்ளலாம்.

* வெளியில் அதிகம் செல்பவர்கள், வெயிலில் வண்டியில் செல்லும்பொழுது சருமம் கறுத்துப்போவதுண்டு. இதை டானிங்(tan) எனச் சொல்வதுண்டு. அழகு நிலையத்தில் சென்று அவ்வப்பொழுது அதனைச் சரி செய்ய வேண்டும். அதனை டீ-டான்(De-tan) என அழைப்பார்கள். இதனை வீட்டிலும் செய்ய முடியும். காய்ச்சாத பால் மற்றும் கடலை மாவைச் சேர்த்து டான் ஆன இடங்களில் போட்டு அரைமணி நேரத்துக்குப்பின் கழுவி எடுத்தால் டான் குறைவதைக் காணமுடியும். அதேபோல் பசலை கீரையை நன்றாக அரைத்து, ஒரு ஸ்பூன் கீரை சாற்றுடன் இரண்டு ஸ்பூன் முல்தானி மிட்டி சேர்த்து முகத்தில் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்துக் கழுவியபிறகு பார்த்தல் நமக்கு நல்ல வித்தியாசம் தெரியும்.

* இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து முகம், கழுத்து, கைகள், கண்களைச் சுற்றித் தடவி, அரைமணி நேரம் கழித்து ஃபேஸ்வாஷ் போட்டுக் கழுவினால் டான் வெகுவாக குறையும்.

* வெயிலில் சென்று வந்தவுடன் பார்த்தால் கைகள், கழுத்து பகுதியில் அதிகம் கருத்திற்கும். இதுபோன்ற இடங்களில் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்துத் தேய்த்து பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு கழுவவேண்டும். இப்படி தினமும் செய்யும்பொழுது டான் எளிதில் நீங்கிவிடும்.

* தினமும் பைக்கில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம். ஆனால், தினமும் ஹெல்மெட் அணியும்பொழுது முடி கொட்டும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஹெல்மெட் அணிவதற்கு முன்பு தலையைச் சுற்றி ஒரு பெரிய துணி அல்லது ஸ்கார்ப் வைத்து மூடிக்கொண்டால் ஹெல்மெட்டினால் தலையில் ஏற்படும் சூடு குறையும். அதனால் முடிகொட்டுவதும் குறையும்
(குறிப்பு: இப்பொழுது கடைகளில் துணி கேப்புகள் கிடைக்கின்றன. அதைக்கூட பயன்படுத்தலாம்.)

* அடிக்கும் வெயிலினால் சரும பாதிப்பு அதிகம். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்குப் பதினைந்து முதல் அரைமணி நேரம் முன்பாக சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். வெயில் படும் இடங்கள் முக்கியமாக முகம், கழுத்து, கைகள் போன்றவற்றில் போட்டுக்கொள்ள வேண்டும். நிறைய நேரம் வெயிலில் இருப்பவர்கள் SPF50 மற்றும் அதற்கு மேல் இருக்கும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். குறைந்த நேரம் மட்டுமே வெளியில் இருப்பவர்கள் எனில் SPF30 முதல் SPF50 வரை உள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். வேர்வை அதிகம் சுரக்கும். அதனால் கிரீம் போடமுடியாது என நினைப்பவர்கள் மேட் வகை சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.

ஆண்கள் சரும பாதுகாப்பு...
ஆண்கள் சரும பாதுகாப்பு...

* முடிக்கு இப்பொழுது சன்ஸ்க்ரீன் கலந்த சீரம் கிடைக்கின்றது. அதனை உபயோகிக்கும்பொழுது நமது முடி உயிரற்றதுபோல இல்லாமல் உயிர்ப்புடன் இருக்கும்.

* ஆண்களுக்குச் சருமம் சிறிது தடிமனாக இருக்கும். எனவே அவர்களுக்கு எனத் தனியாக ஸ்க்ரப் கிடைக்கும். அதனை வாரத்தில் இரண்டு நாள் முகத்தில் பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்வதுபோல் தேய்த்துவிட்டால் சருமத்தில் சேர்ந்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த சரும செல்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.

* பொதுவாக அதிக நேரம் தொலைப்பேசி, கம்ப்யூட்டர் எனப் பார்த்து வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்குக் கீழே வரும் கருவளையங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு வரும் கருவளையங்களை நீக்குவதற்கு எனக் கடைகளில் கிரீம், ஜெல் போன்றவை கிடைக்கும். இதனை இரவில் தூங்கும்முன்பு போட்டுக்கொண்டால் காலை கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

* பொதுவாகவே முகத்திலும், கண்களைச் சுற்றியும் கொலாஜென் கிரீம், ஜெல் போன்றவை உபயோகிப்பதால் முகம் துவண்டு போனதுபோல் இல்லாமல் முகம் இறுகிப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிரிப்பென்னும் அருமருந்து!
ஆண்கள் சரும பாதுகாப்பு...

* வெளியில் செல்லும்பொழுது முகம் பார்ப்பதற்குப் பிரகாசமாக இருப்பதற்கு ஆண்களுக்கும் கன்சீலர் ஸ்டிக் கிடைக்கும். கன்சீலர் போட்டுக்கொண்ட பிறகு அவர்கள் சருமத்தின் நிறத்திற்கேற்ப பவுடர் போட்டுக்கொண்டால் பார்ப்பதற்கு முகம் அழகாகவும் பொலிவுடனும் இருக்கும். கன்சீலர் போடுவதற்கு முன்பு ப்ரைமர் போட்டுவிட்டு அதற்கு மேல் கன்சீலர் போடுவது நல்ல பலனைத் தரும்..

இவ்வாறு ஆண்களும் தங்கள் முகம், சருமம் மற்றும் முடியின் மீது அக்கறை எடுத்துக்கொண்டால் பெண்களுக்கு நிகராக அழகாகவும் மிடுக்காகவும் தெரிவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com