-ம. வசந்தி
"சிரிப்பென்ற ஒன்று சிறிதளவும் இன்றேல் பொறுக்காது இந்த உலகு."
என்ற திருவள்ளுவரின் வாக்குக் கேற்ப மனிதன் சிரிப்பதை மறந்தால் அவனே இல்லாமல் போய்விடுவான் என்பதுதான் உண்மை. மனிதப் பிறப்பின் மகத்துவமே சிரிப்புதான். அதையும் விட சிறப்பு வாய்ந்தது மற்றவர்களையும் சிரிக்க வைப்பது. இந்த நகைச்சுவை உணர்வு இருந்ததால்தான் சந்திரபாபு, என். எஸ். கிருஷ்ணன், நாகேஷ் போன்ற நகைச்சுவை கலைஞர்கள் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். வாய் பேசாமலேயே சைகைகள் மூலம் மட்டுமே ரசிகர்களை சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி போன்றோரும் நகைச்சுவைக்கு பெயர் பெற்றவர்களே. சர்க்கஸ் காட்சிகளில் கூட கோமாளிகளின் சாகசங்களுக்குதான் சிரிப்பும் கைத்தட்டலும் அதிகமாகவே கிடைக்கும்.
அங்கதம், கேலி ,கிண்டல், எள்ளல், குத்தல், கடி, பகடி, நகைச்சுவை, நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி, புன்னகை, முறுவல்,மென்னகை, இளநகை இப்படி பல்வேறு வகைகளில் அழைக்கப்பட்டாலும் சிரிப்பு முகபாவத்தின் மூலம் பல் தெரிய உதடுகளை விரித்து சில வகை குரல் ஒலிகளை ஏற்படுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதே சிரிப்பின் சரியான முறையாகும்.
சிரிப்பதனால் உடல் குலுங்குவதன் மூலம் நரம்புகள் கிளர்ச்சி அடைகிறது. இதனால் உடல் நோய்கள் அகன்று விடுகின்றன. தசை வலுப்பெறுகிறது. உடல் பலம் பெற்று நலமாகிறது. அடிக்கடி வாய் விட்டு சிரித்தால் கவலைகளும் நோய்களும் இல்லாமல் போகும் என்பது மனோ இயல் அறிஞர்களின் கூற்றாக உள்ளது. உடல் பயிற்சியின்போது உடம்பின் தசைகள் அசைந்து பலப்படுவதுபோல, சிரிக்கும் போதும் உடல் வலுவாகிறது உடலில் ரத்தம் வேகமாக பரவி உற்சாகமளிக்கிறது. சுவாசப்பையில் பிராணவாயு அதிகமாக சேருகிறது. உடலுக்கு சக்தியை அளிக்கும் சர்க்கரை பொருளை ரத்தத்தில் பாய்ச்சுகிறது. நரம்புகள் சுறுசுறுப்படை கின்றன. இதனால் நோய்களும் உடலை விட்டு விலகுகின்றன.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை சுற்றி நல்ல நண்பர்கள் கூடியிருப்பார்கள் .எந்த பிரச்சனையையும் கடுமையாக எதிர்கொள்ளாமல் எளிமையாக எடுத்துக் கொள்ளும் கலை அடிக்கடி சிரிப்பவர்களுக்கே உரியது. தேவையற்ற பழக்கங்களை விட்டு விடவும் தீய பழக்கங்களை சேர விடாமல் தடுக்கவும் சிரிப்பு பெரிதும் துணை செய்கிறது. இன்றைய உலகில் பரபரப்பான வாழ்க்கை முறையில் எத்தனையோ இடர்பாடுகள் .எங்கும் அவசரம். சிறிய காரியங்களை கூட பெரிய பாரமாக கருதும் மனப்பான்மை வாழ்க்கையை சுமையாக எண்ணுகிறோம். சிக்கலான பிரச்சனைகளை கண்டால் ஏதோ இழந்தது போல பீதி அடைந்து போகிறோம் .அவற்றிற்கு தீர்வு சிரித்து பழக வேண்டும்.
சிரித்தால் வாழ்க்கை சுவர்க்கம் ஆகும். மனதில் வசந்தம் தளிர்க்கும். எண்ணங்கள் மல்லிகை பூக்களாய் மலர்ந்து இன்பமூட்டும். மகிழ்ச்சி நம் மடி மீது வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலுக்கு தோற்றப் பொலிவை ஏற்படுத்தும். நண்பர்கள் நமக்கு வசியமாவார்கள். காரியங்கள் கைகூடும். எதிரியை பார்த்து புன்னகை பூத்தால் அவனும் நண்பனாகி விடுவான்.
இளமைப் பருவத்தில் நகைச்சுவை உணர்வை மெருகேற்ற வேண்டும். அதை வளர்க்கக்கூடிய நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். இரவில் தூங்கப் போகும் முன்பு வருத்தம் தரும் கதைகளை பார்க்காமல் சிரிப்பு வரும் நூல்களை தேடிப் படித்து தூங்கச் செல்ல வேண்டும். அதை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி இரு மடங்காகும். ஆயுள் அதிகரிக்கும் என்பார் அறிஞர் இறையன்பு.
ஆதலால் மனதைத் திறந்தே வைப்போம் கவலை துன்பம் இவைகளை சிரிப்புச் சாட்டையால் அடித்து விரட்டுவோம் நமது உதடுகளில் எந்த நேரமும் புன்னகையை ஒளிர விட்டு புது வெளிச்சம் காண்போம்.