
தென்னிந்தியப் பெண்கள் என்றாலே ஒரு தனி அழகுதான். அவர்களுடைய பளபளப்பான சருமத்தையும், நீண்டு அடர்த்தியாக இருக்கும் கூந்தலையும் பார்க்கும்போது, "எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படி அமைகிறது?" என்று பலருக்கும் ஒரு சின்ன பொறாமை கலந்த ஆச்சரியம் வருவதுண்டு.
இதற்குப் பின்னால் விலையுயர்ந்த க்ரீம்களோ அல்லது பியூட்டி பார்லர் ரகசியங்களோ இல்லை. மாறாக, நம்முடைய சமையலறையில், நாம் தினமும் பார்க்கும் சில எளிய பொருட்கள்தான் அந்த அழகின் ஆணிவேர். தலைமுறை தலைமுறையாக நம் பாட்டிகளும், அம்மாக்களும் பின்பற்றி வந்த அந்த சிம்பிளான, ஆனால் பவர்ஃபுல்லான அழகு ரகசியங்கள் என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்: கேரளாவில் சமையலில் ஆரம்பித்து அத்தனை விஷயங்களிலும் தேங்காய் எண்ணெய்தான் ராஜா. ஆனால், அதன் உண்மையான மகிமை நம் அழகைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம் சருமத்தைச் சுருக்கங்களிலிருந்து பாதுகாத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன், லேசாகச் சூடு செய்த தேங்காய் எண்ணெயை முகத்திலும், உடம்பிலும் தடவி மசாஜ் செய்து பாருங்கள், உங்கள் சருமம் பட்டுப்போல மென்மையாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.
அதேபோல, வாரத்திற்கு இரண்டு முறையாவது தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால், முடி உதிர்வது குறைந்து, அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
மஞ்சள்: கல்யாணத்தில் நலுங்கு வைப்பதில் ஆரம்பித்து, தினமும் குளிப்பது வரை மஞ்சளுக்கும் தென்னிந்தியப் பெண்களுக்கும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் உண்டு. இது வெறும் மசாலாப் பொருள் அல்ல, இது ஒரு அற்புதமான கிருமிநாசினி. வெயிலில் சென்று வந்ததால் ஏற்பட்ட கருமையை நீக்குவதில் மஞ்சளை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.
ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சேர்த்து கலந்து முகத்தில் பேக் போட்டுப் பாருங்கள். முகம் பளிச்சென்று பிரகாசமாகிவிடும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைத்து, சருமத்திற்கு ஒரு இயற்கையான பொலிவைக் கொடுக்கும். வாரத்திற்கு ஓரிரு முறை இந்த ஃபேஸ்பேக்கைப் பயன்படுத்தினால், பார்லர் போக வேண்டிய அவசியமே இருக்காது.
கறிவேப்பிலை: தாளிக்கும்போது வாசம் வருவதற்காக மட்டும் நாம் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதில்லை. அது நம் கூந்தலுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம். இப்போதெல்லாம் பலருக்கும் முடி நரைத்துவிடுகிறது, முடி கொட்டும் பிரச்சனையும் அதிகமாக இருக்கிறது. இதற்கு மிகச்சிறந்த தீர்வு கறிவேப்பிலைதான்.
தேங்காய் எண்ணெயில் ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு நன்கு காய்ச்சி, அந்த எண்ணெயை வடிகட்டி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வாருங்கள். இது முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துவதோடு, இளநரையையும் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் முடியின் வேர்க்கால்களுக்குச் சென்று, கூந்தலை அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரச் செய்யும்.
அழகு என்பது விலையுயர்ந்த பொருட்களில் இல்லை, அது இயற்கையில் இருக்கிறது என்பதற்கு நம் முன்னோர்களின் இந்த எளிய பழக்கவழக்கங்களே சிறந்த உதாரணம். இனிமேல், உங்கள் அழகைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம், உங்கள் அஞ்சறைப்பெட்டியைத் திறந்தாலே போதும்.