
தேங்காய் என்ற பெயர் 16ஆம் நூற்றாண்டின் போர்த்துகீசிய வார்த்தையான கோகோவிலிருந்து பெறப்பட்டது.
'வாழ்க்கை மரம்' என்றும் அழைக்கப்படும் தென்னை மரத்தில் முழு முதிர்ந்த தேங்காய்கள் உருவாக பூக்கும் தேதியில் இருந்து 11 முதல் 13 மாதங்கள் வரை ஆகும்.
தேங்காய் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. எக்ஸோகார்ப், மீசோகார்ப் மற்றும் எண்டோகார்ப். எக்ஸோகார்ப் என்பது பளபளப்பான வெளிப்புற தோல் பகுதி. மீசோகார்ப் என்பது தென்னை நார் எனப்படும் பகுதி. எண்டோகார்ப் என்பது கடினமான தேங்காய் ஓட்டை உருவாக்குகிறது. இதன் உட்புறம் உண்ணக்கூடிய சதைப்பற்றுள்ள தேங்காய் உருவாகின்றது.
தேங்காய் ஆரம்பத்தில் சிறியதாக இருக்கும் பொழுது 'குரும்பட்டி' என்று அழைக்கப்படும். அதாவது குரும்பக் காய். ஒன்றுக்கும் உதவாது. பின்னர் 'இளநீரா'க மாறும் அதை குடிக்கலாம். உள்புறம் பார்த்தால் ஒன்றும் இருக்காது.
சிறிது காலம் முற்ற விட்டால் இளநீரும், வழுக்கலும் (வழுக்கை) கிடைக்கும். இன்னும் சிறிது முற்ற விட்டால் 'முட்டுக்காய்' என அழைக்கப்படும். இதில் இளநீரும், முற்றாத அரைப் பருவ தேங்காயும் கிடைக்கும். மரத்திலிருந்து தானாக விழும் தேங்காய், மட்டையுடனான தேங்காயிலிருந்து தான் தேங்காய் பூ, எண்ணெய் போன்றவற்றை பெற முடியும்.
தேங்காய் கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்தை காப்பதுடன், முடி உதிர்வை தடுக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான கூந்தல் முதல் இதயம் வரை காக்கிறது. இது நல்ல கொழுப்பான எச்டிஎல்-ஐ (HDL) அதிகரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். பச்சையாக தேங்காயை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் தேங்காய் மூன்று தோஷங்களை (வாதம், பித்தம், கபம்) சமநிலைப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.
தேங்காய் சமையல் மற்றும் அழகு சாதன பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
தேங்காயில் இயற்கையாகவே ஆன்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேங்காயில் 60 சதவிகிதம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை பச்சையாக உட்கொள்ளும் பொழுது எடை இழப்புக்கு உதவுகிறது. ஏனெனில் இது உடல் கொழுப்பை விரைவாக எரிக்கிறது. பசியை அடக்குகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தேங்காய் நீரில் (இளநீர்) லாரிக் அமிலம் உள்ளது. இது தாய்ப்பாலுக்கு சமமாக கருதப்படுகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
தேங்காய்களில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளன. இது ரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும். தேங்காய் சட்னியில் ஆரம்பித்து பேக்கரி ஐட்டங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.
வெறும் வயிற்றில் பச்சை தேங்காய் அல்லது இளநீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும்.
ஸ்மூத்திகள், சூப்கள் முதல் இனிப்பு வகைகள் வரை பல்வேறு வகையான சமையல் குறிப்புகளில் தேங்காய்ப் பால் சேர்த்து செய்வது ஊட்டச்சத்தை அதிகரிப்பதுடன், சுவையையும் கூட்டுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)