

நாம் அனைவருக்குமே அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பது ஆசை. ஒன்றிரண்டு முடிகொட்டும்போது ஆலோசனை பெற பார்லருக்கு செல்கிறோம் அல்லது ஹேர் ஆயிலை மாற்றுகிறோம். நமக்குத் தேவை இப் பதிவில் கூறப்பட்டிருக்கும் 5 வகையான வைட்டமின்கள் அடங்கிய உணவுகள் என்பது பலருக்குத் தெரிவதில்லை. அந்த வைட்டமின்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
வைட்டமின் A: வைட்டமின் A, முடியை ஈரப்பசையுடன் வைக்கவும் முடி உடையாமல் பாதுகாக்கவும் உதவக்கூடிய செபம் (Sebum) என்ற ஆயிலை இயற்கை முறையில் ஸ்கால்ப் உற்பத்தி செய்ய உதவும். செபம் உற்பத்தி குறையும்போது முடி உலர்ந்தும் சிக்கலாகவும் ஆகி, உதிரவும் வாய்ப்பாகிவிடும். கேரட், பூசணி, பசலைக் கீரை மற்றும் ஸ்வீட் பொட்டட்டோ மூலம் வைட்டமின் A சத்தை நாம் பெறமுடியும்.
வைட்டமின் B7 (Biotin): முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய கெராட்டின் என்ற புரதச்சத்தின் உற்பத்தியில் பயோட்டின் மிக முக்கியமான பங்களிக்கிறது. உடலில் வைட்டமின் B7 சத்து குறையும்போது முடி வலுவிழந்து, உடைந்து உதிர ஆரம்பிக்கும். முட்டை, தாவர வகைக் கொட்டைகள், விதைகள், முழுதானியங்கள், பாசிப்பயறு மற்றும் கொண்டைக்கடலை ஆகிய உணவுப்பொருட்களிலிருந்து நாம் பயோட்டின் சத்தைப்பெற முடியும்.
வைட்டமின் C: முடி வளர்ச்சிக்கு இரும்புச் சத்தும் அவசியம். உடலுக்குள் இரும்புச்சத்து உறிஞ்சப்பட வைட்டமின் C சிறந்த முறையில் உதவிபுரியும். உடலில் வைட்டமின் C குறையும்போது முடி உதிரவும், நரைமுடி தோன்றவும் ஆரம்பிக்கும். முடியின் வேர்ப் பக்கத்தின் நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடவும் வைட்டமின் C உதவும். அதிகளவு வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய், கொய்யாப் பழம், ஆரஞ்சு, குடை மிளகாய் மற்றும் எலுமிச்சை போன்றவைகளிலிருந்து நாம் வைட்டமின் C சத்தைப் பெறலாம்.
வைட்டமின் D: முடியின் வேர்ப் பக்கத்து நுண்ணறைகளின் ஆரோக்கியம் மேம்பட உதவும் வைட்டமின் இது. வைட்டமின் D சத்தை நாம் சூரிய ஒளியிலிருந்து பெறலாம். வெயில் படாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களின் முடி மெலிவடையவும், தலையில் ஆங்காங்கே அலோபீசியா (Alopecia) எனப்படும் திட்டுச் சொட்டை விழவும் வாய்ப்பு உண்டாகும். எனவே தினமும் 15-20 நிமிடம் வெயிலில் நிற்பதுடன், பால், முட்டை, மீன் மஷ்ரூம் போன்ற உணவை உட்கொள்வதன் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.
வைட்டமின் E: இதிலுள்ள வலிமையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகச் செல்ல உதவும். இதனால் முடியின் வேர்ப்பகுதி அதிகளவு ஊட்டச் சத்துக்கள் பெற்று ஆரோக்கியமாய் செயல்பட முடியும். முடி, வளர்ச்சியும் ஆரோக்கியமும் பெறும். பசலைக்கீரை, அவகாடோ பழம், ஆல்மண்ட் மற்றும் சூரியகாந்தி விதைகளிலிருந்து வைட்டமின் E சத்தை நாம் பெறலாம்.
சுருக்கமாக கூறப்போனால், நம் கிச்சனிலுள்ள பொருட்களே நம் கூந்தல் ஆரோக்கியத்தின் ரகசியம் எனலாம். So simple!
