கூந்தலில் எப்போதெல்லாம் சீரம் பயன்படுத்த வேண்டும்?, எப்போதெல்லாம் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்? என்பது பலருக்கு குழப்பம் தரும் விஷயமாகும். பலர் அது தெரியாததால், மாற்றி மாற்றிப் பயன்படுத்தி கூந்தலை பராமரிப்பதில் தவறு செய்கின்றனர். அந்தவகையில் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், எப்போதெல்லாம் இரண்டையும் பயன்படுத்த வேண்டும்? போன்றவற்றை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
முடி சீரம்:
சீரம் என்பது சிலிக்கான், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் பிற கண்டிஷனர்களால் தயாரிக்கப்படும் ஒன்றாகும். இவை முடியின் தண்டு பகுதியில் பயன்படுத்தும் பொருளாகும். இதனைப் பயன்படுத்துவதால், கூந்தல் மென்மையாகவும், பளப்பளப்பாகவும் மாறும். Dryers, Straignteners, Curling போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தும்போது சீரம் தடவுவதால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது.
அதேபோல் பல வகையான முடி ஸ்டைல்கள் செய்யும்போதும், சிக்கலின்றி செய்வதற்கு இந்த சீரம் உதவி செய்கிறது. சூரிய ஒளியிலிருந்து கூந்தலை காப்பதும் சீரம்தான். கூந்தலை பல வழிகளில் பாதுகாக்கும் இந்த சீரத்தை தலைக்கு குளித்துவிட்டு, ஈரமான முடியில் பயன்படுத்தலாம். அதேபோல் வெளியில் செல்லும்போதெல்லாம், கூந்தலைப் பாதுகாக்க ஈரத்துடனோ அல்லது உலர்ந்த கூந்தலிலோ தாராளமாக நீங்கள் சீரம் பயன்படுத்தலாம்.
சிறிய அளவு சீரத்தை உள்ளங்கையில் விட்டு முடியில் நன்றாகத் தேய்க்க வேண்டும். ஒரேமுறை அதிக அளவு சீரம் தடவுவதை தவிர்க்கவும்.
முடி எண்ணெய்:
எண்ணெய் கூந்தலில் மட்டுமல்ல உச்சந்தலையிலும் தேய்க்க வேண்டும். தேங்காய் எண்ணெய், ஆர்கன் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் எதோ ஒரு எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களில் கொழுப்பு, அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை முடிக்கு ஊட்டமளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவும்.
இந்த எண்ணெய் கூந்தலுக்கு ஊட்டமளித்து உடையாமல் இருக்க உதவுகிறது. அதேபோல் உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதுடன், பொடுகு, அரிப்புகள் ஆகியவை வராமல் தடுக்கிறது. எண்ணெய், கூந்தலை வலிமையாக்கி உடையாமல் பார்த்துக்கொள்கிறது. இது முடியின் பிரகாசத்தை கூட்டுவதோடு, முடி பிளவுப்படாமலும் தடுக்கிறது.
முடி எண்ணெய்யை நீங்கள் குளிப்பதற்கு முன்னதாக, உச்சந்தலையிலும் கூந்தலிலும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் மட்டுமே போதும். அல்லது இரவே மசாஜ் செய்துவிட்டு அடுத்த நாள் காலை தலைக்கு குளிக்கலாம். வெளியில் செல்லும்போது எண்ணெய் பயன்படுத்திவிட்டு செல்வதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், காற்றில் உள்ள தூசிகள் எண்ணெய்யுடன் இருக்கும் உச்சந்தலையிலும் கூந்தலிலும் படர்ந்துவிடும். இதனால் முடிகள் சேதமாகிவிடும்.