பெண்கள் அவரவர் தோற்றத்திற்கு ஏற்ப தலைமுடியை அலங்கரித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். குள்ளமான உடல்வாகு உள்ள பெண்கள் பின்னலிட்டுத் தொங்கவிட்டுக்கொண்டு நிறைய அடர்த்தியாக மலர் சூடிக்கொண்டால் அழகாக இருக்கும். இவ்வாறு பின்னலிட்டு மலர் சூடுபவர்கள் கதம்பம், கனகாம்பரம் போன்ற மலர்களை அணிவது அழகைத் தரும்.
உயரமான தோற்றமுடைய பெண்கள் இரட்டை இலையுடன் உள்ள ஒற்றை ரோஜாவை அணிந்தால் எடுப்பாக இருக்கும். அதிக முடி இல்லாதவர்கள் தற்போது கிளிப் அல்லது 'க்ரஞ்ச்' அணிவது நாகரீகமாக `உள்ளது. எளிமையாகத் தோற்றமளிக்க இத் தலையலங்காரம் ஏற்றதாக உள்ளது. திருமண வைபவங்கள், பார்ட்டிகள், விசேஷங்களில் கொண்டை போட்டுக்கொள்வதே அழகாக இருக்கும்.
* பன் கொண்டை போட்டுக்கொண்டால் கொண்டையைச் சுற்றி மல்லிகை மலர் வைத்துக்கொள்ளவும்.
* 'ரிங்' என்ற வளையம் வைத்துக் கொண்டை போட்டால் அரைச் சந்திர வடிவமாக மலர்ச் சரத்தை மேல்புறம் அல்லது பக்கவாட்டில் சூடுவது அழகாக இருக்கும்.
* உயரமான கொண்டை போட்டுக்கொண்டால் எடுப்பான பெரிய பூக்களை ஒற்றைப் பட்டையாகத் தொடுத்து கொண்டையைச் சுற்றி அணிந்தால் எடுப்பாக இருக்கும்.
* வட்ட வடிவமான கொண்டை போட்டுக்கொண்டால் சுற்றி மலர்ச் சரம் அனிவதோடு கொண்டையின் மத்தியில் அழகான பிளாஸ்டிக் அல்லது வெள்ளியிலான ஆபரணத்தை வைத்துக்கொண்டால் அழகாக இருக்கும்.
வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய ஒரு எளிய தலையலங்காரம்:
1. நடு வகிடு எடுத்து முன்பக்க முடியை இரண்டு பக்கமும் விட்டு விடவும்.
2. அந்த முடியைச் சிறிது சிறிதாக எடுத்து எதிர்மறையாக (Back Comb) வாரி புஸுபுஸுவென வருமாறு பின் செய்யவும். இருபுறமும் இவ்வாறு செய்து முடியை பின்னால் பின் செய்யும்போது முன்புற வகிடு மறைத்து முடி தூக்கலாக எடுப்பாகத் தெரிய வேண்டும்.
3. பின்னால் உள்ள முடியை சேர்த்து ஒரு ரப்பர் பாண்ட் போட்டு மேலிருந்து கீழாக மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
4. கடையில் 'U' வடிவில் கிடைக்கும் பன் ரோல்கள் மூன்று வாங்கிக்கொள்ளவும்.
5. மேல் பக்கம் உள்ள முடியை ஒரு 'U' பன்னில் சுற்றி தலைகீழாக வைத்து பின் செய்யவும்.
6. அடுத்த பாகத்தையும் அதே போல் இன்னொரு 'U' பன்னில் சுற்றி முன்னால் செய்த பன் ரோலின் கீழ் பின் செய்யவும்.
7 மூன்றாவது பகுதியையும் 'U' பன்னில் சுற்றி இதை மட்டும் U வடிவத்திலேயே பின் செய்யவும்.
8. கொண்டையின் நடுப்பகுதியில் மலர்களால் அலங்கரிக்கவும். அல்லது நடுவிலும், கடைசியிலும் சிறு பிளாஸ்டிக் மலர்களால் அலங்கரித்து பக்கவாட்டில், நிஜ மலர்களை வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம்.
நன்றி : மங்கையர் மலர்.