
பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. கூந்தல் குட்டையாக இருக்கிறதே என கவலைப்படாமல், அதற்கேற்ப விதவிதமாக அலங்காரம் செய்யலாம். முக வடிவத்தை பொறுத்து உங்களுக்கு பொருந்தும் விதமாக கொண்டையோ, பின்னலோ போடலாம்.
உருண்டையான முகம் உள்ளவர்களுக்கு கூந்தல் குட்டையாக இருந்தால், அவர்கள் கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி வாரிக் கொள்ளலாம் அல்லது நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.
நீளமான முகம் உள்ளவர்களுக்கு கூந்தல் குட்டையாக இருந்தாலும் அவர்கள் ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக தெரியும். கூந்தலும் குறைவாக இருப்பது போல தெரியாது.
அகலமான முகம் உள்ளவர்களுக்கு கூந்தல் குட்டையாக இருந்தால், அவர்கள் முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.
அகலமான நெற்றி உள்ளவர்களுக்கு கூந்தல் குட்டையாக இருந்தால் அவர்கள் முன் பக்கம் முடியை சற்று எடுத்து ஃபிரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.
உருண்டையான முகம் உள்ளவர்களுக்கு உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.
நீள் வட்ட வடிவில் முகம் உள்ளவர்கள் காதை மூடின மாதிரி கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை போடலாம். முன்னால் பார்த்தால் தெரியுமாறு சூடிக் கொண்டால் முகம் உருண்டையாகத் தெரியும்.
சதுர முகம் உள்ளவர்கள் தங்கள் நீண்ட கூந்தலை தளரத் தளர பின்னல் போடலாம். காதை மூடிய மாதிரி பின்னலும், கொண்டையும் போடலாம்.
காதோர மூடியை சுருட்டி தொங்க விட்டால் கூடுதல் அழகாக இருக்கும்.
தாடை நீண்டு நீள்வட்டமான முகமாக இருந்தால் முடியை வகிட்டில் இருந்து தாடை வரை வந்து விழுவது போல முன்புறமாக சீவினால் அழகாகவித்தியாசமாக இருக்கும்.
குண்டாக இருப்பவர்கள் கொண்டை போடாமல், பின்னல் போட்டால் நல்லது.
குள்ளமானவர்கள் சற்று உயரத் தூக்கி கொண்டை போடலாம்.
கூந்தலை எப்போதும் கலைய விடக்கூடாது உயரத்துக் கேற்றபடி சீவி விட்டுக் கொள்ளவும். சில பெண்களுக்கு இயற்கையாகவே மிக நீளமான கூந்தல் இருக்கும். இவர்கள் கூந்தலின் நுனிகளை நன்றாக பின்னி விட வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பிளந்து விடும்.
(பெண்கள் கூந்தல் அழகு குறிப்புகள் நூலிலிருந்து தொகுப்பு..)