தினமும் கை நகங்களை சுத்தம் செய்து நகத்தில் உள்ள அழுக்கு மற்றும் கசடுகளை அகற்றி விடவேண்டும். முதலில் நகங்களை வைத்து பழங்களின் தோல் உரிப்பது கண்டவற்றையும் சுரண்டுவதற்கு பயன்படுத்தகூடாது. அது நகங்களை பாதிப்பது மட்டுமல்லாமல் கிருமிகள் தொற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
கைகளின் பாதுகாப்பு என்பது அவைகளை தூய்மையாகவும், நகங்களை நன்கு பராமரிப்பதிலும் தான் அமைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நீளமாக வளர்ந்தி ருக்கும் நகங்களை வெட்டி விட வேண்டும். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகத்தை வெட்டவும். நகங்களின் நுனி பகுதிகளை முழுவதுமாக வெட்டக்கூடாது அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிப்பதால் நகங்கள் உடைந்துபோக வாய்ப்பு அதிகம்.
தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவி விடலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
சாப்பிட்டு கை கழுவும்போது நகங்களின் இடுக்குகளில் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
நகங்கள் அழகுடன் திகழ வெளிப்புற சுத்தம் மட்டும் அல்லாமல் நல்ல காய், கனிகள் நிறையவே உட்கொள்ள வேண்டும். இரவில் கைகளை, குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவிவிட்டு தூங்க செல்ல வேண்டும்.
வீட்டு வேலைகள் (தூசி தட்டுவது, ஒட்டடை அடிப்பது) செய்யும்போதோ, தோட்டங்களில் கை வைத்து ஏதாவது வேலை செய்யும்போதோ, கைகளில் உறைகளை அணிந்து கொண்டால் கை நகங்களை பாதுகாக்கலாம்.
கால் நகங்கள்
கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவதோடு அழகாகவும் தோற்றம் அளிக்கும். நகம் சிறியதாக இருந்தால் சுந்தம் செய்வது மிகவும் எளிது.
வெளியில் போய்விட்டு வீட்டிற்கு வந்ததும் பாதங்களை சிறிது வெதுவெதுப்பான நீரில் மஞ்சள்தூள் கலந்து நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். இதனால் கால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். மேலும் பாதங்களை 10 நிமிடம் வெது வெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து ஊறவைக்கவும் பின்னர் சுத்தமான நீரை விட்டு கழுவினால் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி விடும்.
நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்தி நகங்களை சுத்தம் செய்தால் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளிச்சென்று பார்க்க அழகுடன் தோற்றம் அளிக்கும்.
மேலும் கால் நகங்களை பாதுகாக்க நாம் அணியும் காலணி கள் இறுக்கமாகவோ, அழுத்தம் கொடுப்பதாகவோ குட்டையாகவோ, இருக்க கூடாது. காலுக்கு மென்மையாக, வசதியாக இருக்கும் செருப்புகளை அணிய வேண்டும்.
பொதுவாக கை, கால் நகங்களை பாதுகாக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை போதிய அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்போது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை நகங்களில் தடவி மென்மையாக மஸாஜ் செய்து விட்டு பின்பு சுத்த மான காட்டன் துணியால் துடைத்து எடுத்து விட வேண்டும். தண்ணீரில் கழுவக் கூடாது. நகத்தை எப்போதும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நகபூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.