இந்த உலகில் பணக்காரராகவே பிறப்பவர் பலர். சிலர் ஏழ்மை நிலையில் இருந்தாலும் தங்கள் முயற்சி, கடின உழைப்பால் பணக்காரர் ஆவதுண்டு. பணக்காரர்களின் வெற்றி ரகசியம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. மனோநிலை வேறுபாடுகள்;
ஒரு பணக்காரருக்கும் நடுத்தர அல்லது ஏழை மனிதருக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு அவர்களின் சிந்தனையே. பணக்காரர் எப்போதும் செழுமையைப் பற்றியும் வாய்ப்புகளை பற்றியும் சிந்திப்பார். ஏழை மனிதர் பயத்தையும் இல்லாமையைப் பற்றியும் சிந்திப்பார். இந்த மனநிலை மாறுபாடுதான் ஒருவரை பணக்காரராகவும் ஏழையாகவும் வைத்திருக்கிறது. ஒவ்வொரு பைசாவையும் பற்றி நினைத்து கவலைப்படாமல் பணக்காரர்கள் தங்களது வருவாயை எப்படி அதிகரித்துக் கொள்வது என்று சிந்தித்து செயல்படுவார்கள்.
2. வாய்ப்புகளில் கவனம்
பணக்காரர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வார். சவால்களைக் கூட சந்தர்ப்பங்களாக மாற்றிக் கொள்வார். அவற்றை தடைகளாக நினைக்க மாட்டார். ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றை எப்படி தீர்த்து முன்னேறுவது என்பதைப் பற்றி மட்டுமே அவரது கவனம் இருக்கும்.
3. இலக்கை நோக்கிய சிந்தனை
பணக்காரர் எப்போதும் குறிப்பிட்ட இலக்குகளை வாழ்க்கையில் வைத்திருப்பார் அவற்றை அடை வதற்கான சரியான பிளான்கள் அவரிடம் இருக்கும். தன் மீது நம்பிக்கையும் தனது லட்சியத்தின் மீது அவருக்கு இருக்கும் தீராத தாகமுமே அவரை பெரும் பணத்தை தேட வைத்துவிடும்.
4. கல்வி மற்றும் சுய முன்னேற்றத்தில் முதலீடு
பணக்காரர்கள் தங்களது தொழில் சார்ந்த அறிவையும், நவீன விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அந்த திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். தொழிற்சார்ந்த ரிஸ்க்ஸ்களை எடுக்கவும் தயங்க மாட்டார்கள். நிதி மற்றும் முதலீடுகள் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். தங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கும் வளர்ப்பதற்கும் சிறந்த வழிகளை பற்றி தொடர்ந்து கற்றுக் கொள்கிறார்கள். அதை செயல்படுத்துகிறார்கள்
5. பலவித தொழில்களில் பல வழிகளில் வருமானம்
பணக்காரர்கள் எப்போதும் ஒரே ஒரு வழியில் மட்டும் பணம் வருவதை விரும்ப மாட்டார்கள். பலவித வழிகளிலும் முதலீடு செய்து, பல வழிகளிலும் பணம் வந்து கொண்டிருக்கும். ஆனால் ஏழைகள் எப்போதும் ஒரு வழியில் வரும் வருமானத்தைப் பற்றி ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
6. பிரச்சனையை தீர்க்கும் வல்லமை
எப்போதும் புதுமையான சிந்தனையை கொண்டி ருப்பார்கள். சங்கடங்களை கூட வாய்ப்பாக மாற்றி வடும் வல்லமையை படைத்தவர்கள். புதுவிதமான வழிகளில் அவர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை அணுகி வெற்றி பெறுவார்கள்.
7. நீண்ட கால திட்டங்கள்;
எப்போதும் பெரிதாகவே எதையும் சிந்திப்பார்கள். நீண்ட கால திட்டங்களை வைத்திருப்பார்கள். அதற்கு ஏற்ப தங்கள் லட்சியத்தை அமைத்துக் கொண்டு அதை நோக்கி பயணப்படுவார்கள் சாதிக்கவும் செய்வார்கள். பெரிய கனவுகள் காண்பதற்கு அவர்கள் அச்சப்படுவதில்லை முயற்சியில் இறங்கவும் அவர்கள் அஞ்சுவதில்லை. நீண்ட கால வெற்றியை அடைவதற்காக குறுகிய கால தியாகங்களை செய்ய தயாராக உள்ளனர் பொறுமை விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து பொறுமையாக தங்களது பணம் பெருகுவதற்கு காத்திருக்கிறார்கள்.
8. உணர்ச்சி நுண்ணறிவு;
பணக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்கிறார்கள் குறிப்பாக பணம் வரும்போது அவர்கள் பயப்படுவதோ அல்லது பேராசை கொள்வதோ கிடையாது. அவற்றை எப்படி சரியாக முதலீடு செய்து பெருக்கலாம் என்று அறிவுபூர்வமாக முடிவெடுக்கிறார்கள்.
9. பொறுப்பேற்கும் தன்மை;
பணக்காரர்கள் தங்களது நிதி நிலைமைக்கும் விளைவுகளுக்கும் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். தங்களது நிதி நிலைமைக்கு மற்றவர்களையோ அல்லது வெளிப்புற சூழ்நிலைகளை குறை கூற மாட்டார்கள் மாறாக அவர்கள் எதை கட்டுப்படுத்தலாம்? எதை மாற்றலாம் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஏழைகளைப் போல 'நான் ஏழையாக இருப்பது என் தலைவிதி' அல்லது இது மற்றவர்கள் செய்த சதி என்று புலம்புவது கிடையாது.
மொத்தத்தில் பணக்காரர்களின் மனநிலையை வளர்த்துக் கொண்டால் ஒருவர் சீக்கிரமாக தங்களது முயற்சியில் வெற்றி பெற்று செல்வந்தர் ஆகலாம்.