
ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கு ஒவ்வொரு விதமாக தலை முடி பாதிக்கப்படுவது உறுதி. தொழிற்சாலை போன்ற வேலைகளில் ஈடுபவர்கள் தலைமுடியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் தங்கள் தலை முடியை மூடி வைத்துக்கொள்வது நல்லது. அளவுக்கு அதிகமாக மூடி வைத்தாலும் தலையில் ஏற்படும் வியர்வை உலர்ந்து போகாமல் ஆகிவிடும். அதனாலும் தலைமுடிக்கு தீங்கு வரும். அதனால் தலைக்குள் நன்கு காற்று புகுந்து செல்லும்படியான தொப்பிகளை அணிந்துகொண்டால் நல்ல வசதியாக இருக்கும்.
தொழிற்சாலையில் வேலை செய்பவர்களின் தலையில் அதிகமாக அழுக்கு சேர்ந்து விட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் நாள்தோறும் தலைக்கு சீயக்காய்தூளை அடுப்பில் ஏற்றி சூடு காட்டி தலைக்கு தேய்த்துக் கொள்வது நல்லது. இதனால் தீயில் வெந்துபோன தலைமுடியை நன்கு சுத்தம் செய்து போஷாக்காக வைத்திருக்க வசதியாக இருக்கும்.
வாரத்திற்கு ஒரு தடவையாவது முடியின் வேர்ப்பகுதியில் மாத்திரம் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணெயை அழுத்தி தடவி மசாஜ் செய்தால் அது வேர்ப்பகுதியை நன்கு விழிப்படையச் செய்து, முடி வளர்ச்சிக்கு உதவும். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு தலையில் பசும்பாலைத்தை வைத்து சற்று ஊறவைத்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு பளபளப்பாகும்.
நல்ல உணவுப் பழக்கத்தினாலும் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். நிறைய மோரை கடைந்து குடித்து வருவது நல்லது. இது தலை முடிக்கு நல்ல ஊட்டம் தர வல்லது.
சிலருக்கு கூந்தல் மினுமினுப்பு குன்றி உயிரற்றதுபோல் காணப்படும். இவர்கள் கிளிசரினையும், ஆமணக்கு எண்ணெய்யும் சமஅளவு கலந்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி ஆறவைத்து தினம் தலையில் தடவி சீவி வந்தால் சீக்கிரம் முடியில் மினுமினுப்பு ஏற்படும்.
முற்றிய தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு காய்ச்சி இறக்கி ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டால் அதுதான் செறிவூட்டப்பட்ட தேங்காய் எண்ணெய். இதை நாள்தோறும் தலைக்கு தடவி வாரி வந்தால் முடியும் நன்கு கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
அதேபோல் கருவேப்பிலையை நன்கு அரைத்து வடையாக தட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ளலாம். அதையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி முருகலானவுடன் இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டால் தலைக்கு தேய்த்து குளிக்கலாம். கருவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் முடிவளர்ச்சிக்கு இது உதவும். கருவேப்பிலை குழம்பு, தொக்கு, துவையல், பொடி என்று உபயோகித்து வந்தால் முடி வளர்ச்சிக்கு உதவும்.
இப்படி உணவுடன் சேர்த்து சில மருந்துகளை கையாண்டால் எந்தப் பணி செய்பவர்கள் ஆக இருந்தாலும், நீரிழிவு நோய் தாக்கியிருந்தாலும், ரத்தசோகையால் முடி கொட்டினாலும் அதிலிருந்து முடி உதிர்வதை தடுத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியைப் பெறலாம்.