உங்கள் தலைமுடியை எண்ணெய் தடவாமலேயே ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம்.
முன்பெல்லாம் எண்ணெய் தடவி இறுக்கமாக எடுத்து சீவி பின்னுவார்கள். அல்லது கொண்டைப் போடுவார்கள். எண்ணெய் அவர்களின் முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். ஆனால், இப்போது எண்ணெயின் பிசுபிசுப்புத் தன்மை யாருக்குமே பிடிக்கவில்லை. அதுவும் பெண்கள் இப்போது பணிக்கு செல்வதும் பள்ளிக்கு செல்வதும் கல்லூரிக்குச் செல்வதும் அதிகம் என்பதால், எண்ணெய் வடிந்த முகத்துடன் வெளியே செல்ல விரும்புவதில்லை.
ஆகையால் எண்ணெய் தடவாமலேயே எப்படி கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது என்பதே பல பெண்களின் கேள்வியாக உள்ளது.
வீட்டு பராமரிப்பு குறிப்புகள்:
வீட்டில் இயற்கைப் பொருட்களை வைத்து கூந்தலைப் பராமரிப்பது அவசியம். தேன், முட்டை, தயிர், வாழைப்பழம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சரியான முறையில் தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்.
உணவு பழக்க வழக்கம்:
கீரைகள், காய்கறிகள், பூசணி விதைகள், பீன்ஸ், கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ், குயினோவா, தயிர், பால் மற்றும் மீன் ஆகியவற்றை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் இருக்கும் இரும்பு மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு கூந்தலை ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்ளும்.
ஸ்டைலிங் கருவிகள்:
கூந்தலை ஸ்ட்ரைட் மற்றும் கர்ல் செய்யும் கருவிகளை அதிகம் பயன்படுத்துவதால் முடி உடைதல், உதிர்தல் ஆகியவை ஏற்படும். எனவே, ஸ்ட்ரைட்னர், கர்லர் அல்லது ட்ரையர் போன்ற சூடான கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் தலைமுடியில் வெப்ப-எதிர்ப்பு ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவது நல்லது. முடிந்தவரை அந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது சிறந்தது.
சீப்பு:
சின்ன பற்களைக் கொண்ட சீப்புகள் முடியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதுவே பெரிய பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்தினால், முடியில் எந்த அழுத்தமும் இருக்காது.
இரசாயனங்கள் அதிகம் கலந்த ப்ராடக்டுகளை பயன்படுத்த வேண்டாம்:
ஆல்கஹால், பாரபென், சல்பர் மற்றும் சிலிக்கான் ஆகியவை உள்ள ப்ராடக்டுகளை தவிர்க்க வேண்டும். இவை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள். ஒவ்வொரு ப்ராடக்டுகளையும் அதில் இருக்கும் உள்ளடக்கத்தைப் படித்து வாங்குவது நல்லது.
இந்த விஷயங்களை கருத்தில்கொண்டு பின்பற்றினால், முடி ஆரோக்கியமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும்.