

இந்தியாவில் ஜடை பின்னுதல் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.
இந்த ஜடைப் பின்னல்கள் பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இவை பெண்மை மற்றும் நேர்த்தியின் சின்னமாக விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் காலத்தால் அழியாதது இந்தக் கலை வடிவம். இது ஒருவருக்கு தோற்றத்தின் நேர்த்தியையும் வசீகரத்தையும் தருவதுடன் தலைமுடியை நிர்வகிப்பதற்கும், அலங்காரம் செய்வதற்கும் ஒரு நடைமுறைத் தீர்வாக அமைகிறது.
பாரம்பரிய ஜடை பின்னலை சமகாலக் கூறுகளுடன் இணைக்கும் கலப்புப் பாணிகள் தற்போது பிரபலமடைந்துள்ளன. இவை இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை பிரதிபலிப்பதுடன் அழகு, பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது.
ஜடை பின்னல் சர்வதேச அளவிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மற்றும் ஒரு செழுமையான வரலாறு உண்டு. எகிப்து போன்ற பண்டைய நாகரீகங்களில் கூட ஜடை பின்னலின் தோற்றத்தை நம்மால் காண முடிகிறது.
ஆப்பிரிக்காவிலும் ஜடைகள் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இங்கு சிக்கலான வடிவங்களும், வடிவமைப்புகளும் பழங்குடியின இணைப்புகளையும் தனிப்பட்ட அடையாளத்தையும் பிரதிபலிக்கின்றன.
பண்டைய கிரேக்க பகுதிகளிலும் ரோமிலும் கூட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பின்னல் சிகை அலங்காரங்களில் ஈடுபட்டிருந்தனர். ஆடம்பரத்தையும் நேர்த்தியையும் வெளிப்படுத்தும் விதமாக இவர்கள் பின்னல்களில் நாடாக்கள், மணிகள் மற்றும் தங்க ஆபரணங்களால் கூட அலங்கரித்தனர்.
தமிழ்நாட்டில் பெண்களின் கூந்தலை அழகாகப் பின்னுவது ஒரு கலை வடிவமாகவே போற்றப்படுகிறது. திருமணங்கள் மற்றும் பரதநாட்டிய நிகழ்வுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஜடை பின்னுதல் மத மற்றும் சடங்கு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
முகலாய பேரரசின் தாக்கத்தால் உருவான, பல பின்னல்களை ஒன்றாகப் பின்னுவதை உள்ளடக்கிய முகலாயப் பின்னல் பெண்களுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. இன்று புதிய பாணிகளும் நுட்பங்களும் உருவாகி வருவதால் ஜடை பின்னுவது தொடர்ந்து புதிய வழிகளில் பரிணமித்து வருகிறது.
கூந்தலை அழகாக அலங்கரிப்பது மட்டுமல்லாமல், தலைமுடியை பாதுகாக்கவும் உதவும் கலைநயமான இதில் பல பாணிகளும் நுட்பங்களும் உள்ளன.
பாரம்பரிய பின்னல் மற்றும் சிக்கலான நவீன பின்னல் பாணிகள்:
1. பிரஞ்சு பின்னல் (French Braid):
தலைமுடியின் முன் பகுதியிலிருந்து தொடங்கி கீழே வர வர புதிய கூந்தல் இழைகளை சேர்த்துக் கொண்டே பின்னும் நுட்பமாகும். இது கூந்தலை அழகாகவும், நாள் முழுவதும் கலையாமலும் வைத்திருக்க உதவுகிறது.
2. டச்சுப் பின்னல் (Dutch Braid):
பிரெஞ்சுப் பின்னலுக்கு நேர்மாறான நுட்பம் இது. இதில் இழைகளை மேல்நோக்கி வைப்பதற்கு பதிலாக கீழ்நோக்கி கொண்டு சென்று பின்னுவார்கள். இதனால் பின்னல் தலைமுடியின் மேல் தனியாக துருத்திக் கொண்டு முப்பரிமாண (3D) தோற்றத்தைத் தரும்.
3. மீன்வால் பின்னல்(Fishtail Braid):
இந்த நுட்பத்தில் கூந்தல் மூன்றுக்கு மாறாக இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவின் வெளி ஓரத்திலிருந்தும் மிக மெல்லிய கூந்தல் இழைகளை எடுத்து மாற்று பக்கத்திற்கு மாற்றி மாற்றி பின்னுவதன் மூலம் மீனின் வால் போன்ற நுட்பமான வடிவமைப்பு கிடைக்கும்.
4. நீர்வீழ்ச்சி பின்னல் (Waterfall Braid):
இது பிரஞ்சு பின்னல் நுட்பத்தைப் போன்றதே. ஆனால் இதில் பின்னும்போது சில இழைகளை மட்டும் கீழே தொங்கவிட்டு நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்குவார்கள். இது திருமணங்கள் மற்றும் சுப விசேஷங்களுக்கு மிகவும் ஏற்றது.
5. கயிறு பின்னல் (Rope Braid):
இரண்டு கூந்தல் இழைகளை மட்டும் எடுத்து, அவற்றை முதலில் தனித்தனியாக முறுக்கி(twist), பின் ஒன்றோடு ஒன்று கயிறு போல் சுருட்டி பின்னும் எளிய நுட்பமாகும்.
ஜடை பின்னுதல் என்பது தனி நபர்கள் தங்களுடைய படைப்பாற்றலையும் பாணியையும் கூந்தலின் மூலம் வெளிப்படுத்த உதவும் சிறந்த கலை வடிவமாக விளங்குகிறது.
பல தலைமுறைகளாக நாம் பின்னி வரும் ஜடை வெறும் அழகுக்கானது மட்டுமல்ல, அதன் பின்னணியில் உலகளாவிய ரகசியங்களும் கலாச்சார அடையாளமும் கலந்திருக்கிறது என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.