சரும பராமரிப்பு முறையில், இந்தியாவில் நீண்ட காலமாகவே இயற்கை வைத்தியம் மற்றும் பல ஆரோக்கிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாப்பு என வரும்போது, இந்தியாவில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தியே நாம் சன் ஸ்கிரீன் லோஷங்கள் தயாரிக்க முடியும். இதன் மூலமாக, வெயில் காலங்களில் சன் ஸ்கிரீன் ப்ராடக்டுகளுக்கு நாம் செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
இந்தப் பதிவில் சூரியனின் கடுமையான கதிர்களுக்கு எதிராக, இயற்கைக் கவசத்தை உருவாக்கும் ஆலோவேரா மற்றும் மஞ்சள் சன் ஸ்கிரீன் லோஷனை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம்.
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சன் ஸ்கிரீன் லோஷனின் நன்மைகள்:
வணிகரீதியாக தயாரிக்கப்படும் சன் ஸ்கிரீன்களில் பெரும்பாலும் செயற்கை ரசாயனங்கள் உள்ளன. இவை நம் சருமத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆனால் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சன் ஸ்கிரீன் லோஷன்கள், நம் சருமத்திற்கு எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அதில் எதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை நாம் தான் தேர்வு செய்யப் போகிறோம். இதன் மூலமாக சருமத்திற்கு இயற்கையான முறையில் ஊட்டமளித்து, சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் இருக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
¼ கப் ஆலோ வேரா ஜெல்
2 ஸ்பூன் பாதாம் எண்ணெய்
1 ஸ்பூன் தேன்கூடு மெழுகு
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் Non-Nano zinc Oxide Powder
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் பாதம் எண்ணெய் மற்றும் தேன் மெழுகு செய்து சூடாக்கிக் கொள்ளுங்கள். தேன் மெழுகு உருகி அனைத்தும் ஒன்றாகக் கரைந்ததும், அதை ஆறவிட்டு, கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இறுதியில் அந்தக் கலவையில் Non-Nano zinc Oxide Powder சேர்த்து கலக்கினால் பேஸ்ட் போல மாறிவிடும். இந்த லோஷனை சுத்தமான காற்று புகாத டப்பாவில் அடைத்து சேமித்துக் கொள்ளுங்கள்.
இதை கோடை காலத்தில் வெளியே செல்வதற்கு முன் முகத்தில் தடவினால், சூரியக் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். இதில் மஞ்சள் கலந்திருப்பதால் பெண்களுக்கு ஏற்ற சரியான சன் ஸ்கிரீன் லோஷனாக இருக்கும்.