ஒவ்வொரு சிறந்த சிந்தனையாளரின் பின்னாலும், உந்துதல், தோல்வி மற்றும் மாற்றத்தை நோக்கிய தீராத ஆசை ஆகியவற்றின் கதை உள்ளது. அப்படிதான் இந்திய நவீன தத்துவத்தின் தந்தையான ராஜாராம் மோகன் ராயின் வாழ்க்கைப் பயணமும், பல சவால்களை எதிர்கொண்டு, சமூக, மத மற்றும் அறிவுசார் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு உந்துதலை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் ராஜாராம் மோகன் ராயை, இந்திய நவீன தத்துவத்தின் தந்தையாக மாற்றிய காரணிகளை சற்று ஆராய்வோம்.
ராஜாராம் மோகன் ராய் ஒரு சமூக & மத சீர்திருத்தவாதி, தத்துவவாதி மற்றும் ஒரு தலைசிறந்த சிந்தனையாளர். அவர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் அறிவுசார் மற்றும் சமூக நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். பொதுவாக, இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என குறிப்பிடப்படும் இவர், நவீன இந்திய சிந்தனையின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
தேடுதல் மற்றும் வேட்கை: சிறுவயதிலிருந்தே ராஜாராம் மோகன் ராய்க்கு அறிவுக்கான தீராத தாகம் இருந்தது. அவர் கிழக்கு மற்றும் மேற்கத்திய தத்துவ மரபுகளில் பரந்த அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அவற்றின் போதனைகளை ஒருங்கிணைக்க முயன்றார். பல்வேறு தத்துவங்கள் பற்றிய அவரது ஆழமான புரிதல், நடைமுறையில் உள்ள நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்தி, மதம் மற்றும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் அணுகுமுறையைத் தூண்டியது.
சமூக அநீதிகளை கவனித்தல்: ராஜாராம் மோகன் ராய் பகுத்தறிவு, தனிமனித சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்ததால், அவரது உலகம் சார்ந்த கண்ணோட்டம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக ஜான் லாக், வால்டர் மற்றும் ரூசோ போன்ற தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துக்கள், மதக் கோட்பாடுகளுக்கு சவால் விடுக்க அவரைத் தூண்டின.
தனிப்பட்ட நம்பிக்கை: ராஜாராம் மோகன் ராயின் உந்துதல்கள் அவரது தனிப்பட்ட நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றி இருந்தன. இதன் காரணமாகவே அவர் நீதி, நேர்மை, நியாயம் மற்றும் மனித நலனில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். இதவே தனி நபர்களின் உரிமை, சாதி, பாலினம் மற்றும் மதப் பின்புலத்தை பொறுப்பெடுத்தாமல் அவரை போராடத் தூண்டியது.
முற்போக்கு சிந்தனை: ராய், இந்தியாவைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். சமூக அநீதிகள், மதவெறி மற்றும் அறியாமை ஆகியவற்றிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை. சமூக சீர்திருத்தம் மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலம், இந்தியா பல சவால்களை சமாளித்து முன்னேறும் என அவர் ஆழமாக நம்பினார்.
இவரது இத்தகைய வித்தியாசமான செயல்பாடுகளினாலேயே இந்தியாவின் மறுமலர்ச்சியின் தந்தையாகப் போற்றப்படுகிறார். இவரைப் போலவே நாமும் நம்மை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். பல புதிய விஷயங்களை முயற்சித்து, நம்முடைய ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.