
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. இது நாம் அறிந்ததே. சாதாரணமாக பெரியவர்கள் கூறும்பொழுது சிரித்தால் சென்டிப்போடு சிரிக்க வேண்டும். அழுதால் ஆங்காரத்தோடு அழ வேண்டும் என்று கூறுவார்கள். இப்படி சிரிப்பதிலும், அழுவதிலும் கூட லட்சண சாஸ்திரங்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?. அவைகள் பற்றி இதோ:
முகவாய்க்கட்டு சிலருக்கு உருண்டு திரண்டு அமைந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் சாதுக்களாகவும், சத்வ குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்திலும் பதற்றமின்றியும், பொறுமையாகவும் நடந்து கொள்ளும் இவர்கள்,தங்கள் வேலையிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்களாம் . மற்றவர்களுக்கும் தக்க சமயத்தில் உதவி செய்வதில் தயக்கம் காட்டாதவர்களும் இவர்கள்தான் என்கிறது இலட்சண சாஸ்திரம்.
சதுரமான முகவாய்க்கட்டு அமையப்பெற்றவர்கள் துணிச்சல் மிக்க வலிமை உடையவராகவும், வீரதீர செயல்களில் வெற்றியும், புகழும் பெறுவோராகவும் இருப்பார்களாம்.
உருண்டு திரண்ட முகவாய் கட்டும், உதட்டுக்குக் கீழே குழிவும் அமைய பெற்றவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆவார்களாம். அதிர்ஷ்டசாலிகளான இவர்கள் இந்த நவீன காலத்தில் குதிரைப் பந்தயம் ,லாட்டரி சீட்டு போன்றவற்றில் எதிர்பாராத பெருந்தொகையை ஆதாயமாக அடைவார்கள் என்கிறது முகவாய்க் கட்டுப்பற்றிய இலட்சண சாஸ்திரம்.
சிரிக்கும்போது பற்கள் வெளிப்படும் படி விளங்காமலும், கன்னங்கள் சிறிதளவு பூரித்துப் பருத்தும், உட்குழிவுடனும், மிகவும் இனிமையாகவும் கம்பீரமாகும் உடல் குலுங்காமலும் இருந்தால், இத்தகையவர்கள் மங்கையராலும் மற்றவர்களாலும் போற்றப்படுவார்கள் என்கிறது இலட்சண சாஸ்திரம்.
அழும்போது கண்களில் கண்ணீரே இல்லாமலும், ஒரு மெல்லோசையாகவும், கம்பீரமாகவும் இருந்தால் கண்களுக்கு நன்மை உண்டாகும்.
சிலர் சிரிக்கும்போது தலையும், தோள்களும் அதிர்ச்சி அடையும் வகையில் குலுங்குவதைக் காணலாம். மேலும் அவர்களின் கண்களின் இமைகள் மூடிக்கொள்ள கண்கள் இரண்டிலும் கண்ணீர் பெருகும். அப்பொழுது குரலோசைமாறி விடுவதையும் கவனித்திருக்கிறோம். அப்படி இருந்தால் வாழ்க்கையில் நடுத்தரமான பொருளாதார வசதிகளை பெற்றுத் திகழ்வார்கள் என்கிறது இலட்சண குறிப்பு.
சிரிப்பதால் வாழ்நாள் கூடும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். நாம் இருக்கும் இடமே சுபிட்சமாக மாறிவிடும் .ஆதலால் என்டார்பின் சுரக்க சிரிப்போம். அழுவதால் கவலைகள் மறந்து போகும். கஷ்டங்கள் கண்ணீரில் கரைந்து விடும். ஆதலால் அழுகை வந்தால் அதை கட்டுப்படுத்தாமல் அழுதுவிட்டு அடுத்த வேலையை தொடங்கி இலக்கை நோக்கி பயணம் செலுத்தவேண்டும்.