

தேவையான அளவு நேரம் ஒதுக்கி, கவனமுடன், இங்கு கூறப்பட்டிருக்கும் ஏழு படிகளில் உங்கள் புருவங்களை கலரிங் (tinting) செய்து அழகுறச் செய்யலாம். செலவும் அதிகமாகாது. உங்களால் முப்பது நிமிட நேரம் ஒதுக்க முடியும் என்ற நிலையில் இந்த செயல்முறையை தொடங்குங்க.
ஸ்டெப் 1: புருவ முடிகளை டின்டிங் செய்ய திட்டமிட்டிருக்கும் நாளுக்கு முந்திய தினம், இடுக்கி முள் (tweezer) ளின் உதவியால், இரண்டு புருவங்களுக்கு இடையில் மற்றும் புருவங்களுக்கு அடியில் அங்கும் இங்குமாக வளர்ந்து நிற்கும் தேவையில்லாத உரோமங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு, புருவங்களை
அழகுற வடிவமைத்துக் கொள்ளுங்கள். டின்டிங் செய்யும் நாளன்று, முகத்தில் உள்ள மேக்கப்பை முழுமையாக நீக்கி, புருவம் உள்ள பகுதியை மைசெல்லார் (micellar) வாட்டரை வைத்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பின் ஒரு ப்ரோ பென்சில் வைத்து புருவ வடிவின் வெளி ஓரங்களை வரைந்து கொள்ளுங்கள். இதனால் இரு பக்கத்து புருவங்களையும் சமச்சீர் படுத்தவும், டின்டிங் செய்யும்போது டை (dye) வெளிப்பக்கம் பரவாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்.
ஸ்டெப் 2: நீங்கள் கலரிங் செய்ய திட்டமிட்டுள்ள பகுதியைத்தாண்டி டை பரவாமலிருக்க, கிரீம், பாம், ஜெல்லி போன்றவற்றில் ஏதாவது ஒன்றினால் ஒரு தடிமனான அடுக்கை (layer), ப்ரோ பென்சிலால் வரைந்த கோட்டின் கீழ் அமைத்துக்கொள்ளவும். பின் கையுறை அணிந்துகொள்ளுங்கள்.
ஸ்டெப் 3: மெட்டல் அல்லாத ஒரு சிறிய பௌலில், தேர்ந்தெடுத்துள்ள நிறமியை (brow pigment) 1-2 cm அளவு நிரப்பவும். அதனுடன் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அளவு டெவெலப்பர் சேர்த்து, ஒரு பிரஷ் மூலம் நன்கு கலக்கவும். இயற்கையான தோற்றம் பெற உங்கள் ப்ரோ முடியின் கலரைவிட சிறிது பிரைட்னஸ் குறைந்த நிறமியை தேர்ந்தெடுப்பது சிறப்பு.
ஸ்டெப் 4: நிறமி கலவையை, சிறிது வளைந்த முனையுடய புருவ பிரஷ் கொண்டு, மூக்கிற்கு அருகில் உள்ள பக்கத்திலிருந்து ஆரம்பித்து வால் பகுதி வரை சிறு சிறு பகுதியாய் ஒரே மாதிரியான அளவில் இடைவெளியின்றி தடவி வரவும். கிரே ஹேர் அல்லது மெல்லிவுற்ற முடிகளை ஆரம்பத்திலேயே பிரஷ் பண்ணி விடவும். புருவத்தின் மேற்பகுதியும் அடிப்பகுதியும் ஒரே மாதிரியான தோற்றம் பெறுமாறு கவனம் செலுத்தி பிரஷ் பண்ணுவது அவசியம். பென்சிலால் வரைந்த கோட்டைத்தாண்டி கலரிங் பேஸ்ட் பரவுமானால், உடனடியாக சிறிது ஈரமான பஞ்சு வைத்து துடைத்து விடவும்.
ஸ்டெப் 5: 3-5 நிமிட இடைவெளிக்குப் பின், ஒரு ஸ்பூலி பிரஷ் கொண்டு புருவ முடிகளை மிருதுவாக சீவிவிடவும். பின் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் (சுமார் 7-15 நிமிடம்) டின்ட்டை நீக்கிவிடுவது அவசியம். தாமதித்தால், புருவ முடிகளின் நிறம் சமநிலையற்றுப் போகவும், திட்டுக்கள் உருவாகவும் வாய்ப்பாகிவிடும்.
ஸ்டெப் 6: குறிப்பிட்ட நேரம் முடிந்ததும், ஒரு ஈரமான பருத்திப் பஞ்சினால் புருவத்தின் அடர்த்தியான பகுதியில் ஆரம்பித்து வால் பகுதி வரை துடைத்துவிடவும். பின் இளஞ் சூடான நீரினால் (சோப் உபயோகிக்காமல்) மிருதுவாக புருவங்களை கழுவவும். ஈரமின்றி காய்ந்ததும் பிரஷினால் வாரிவிடவும். பின் முடிகள் பள பளப்படைய ஊட்டச்சத்து தரும் எண்ணெய் லேசாகத் தடவிவிடவும்.
ஸ்டெப் 7: டின்ட்டிங் முடிந்ததும் முடி ஆக்ஸிடைஸ் ஆகவும் செட்டில் ஆகவும் ஒரு மணி நேரம் ஒதுக்கவும். பின் இரண்டு பக்கத்து புருவங்களையும் ஒப்பீடு செய்து, வேறுபாடு ஏதும் இருப்பின் புரோ பென்சில் அல்லது ஹைலைட்டர் உதவியால் சரி பண்ணிக் கொள்ளலாம்.
அடுத்து வரும் சில நாட்களுக்கு டின்டிங் செய்த புருவங்களை அழுத்தித் தேய்க்காமலும், நேரடி சூரிய ஒளி படாமலும் பாதுகாப்பது நலம். புருவங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் SPF பயன்படுத்துவது புருவ முடிகளின் நிறம் மங்காமல் பாதுகாக்க உதவும்.
Tips: நவீன காலத்தில் கிடைக்கும் அம்மோனியா இல்லாத டை அல்லது டின்டிங் ஜெல்/பவுடர் உபயோகிப்பது மூன்று வாரங்கள் வரை புருவ நிறம் மங்காமல் பாதுகாக்க உதவும்.
ப்ரோ டை ஆரம்பிப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், காதுக்குப் பின்புறம் பேட்ச் (patch) டெஸ்ட் பண்ணி அலெர்ஜி உண்டாகாமல் இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்வது அவசியம்.