பண்டைய காலத்திலிருந்தே தங்கம் அழகு மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக போற்றப்படுகிறது. தங்க நகைகளை அணிவது மட்டுமல்லாமல் சரும பராமரிப்பும் தங்கத்தை பயன்படுத்தி வந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் தங்க பேசியல் என்னும் முறையானது, சரும பராமரிப்பு வழக்கத்தில் மிகவும் பிரபலமானதாகும். இப்படி செய்யப்படும் பேசியல், சருமத்தை பிரகாசமாகவும், வயதான தோற்றத்தைக் குறைத்து மென்மையான தோற்றத்தை அளிக்க உதவும் என நம்பப்படுகிறது. இந்தப் பதிவில் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய தங்க பேசியலுக்கான ஒரு எளிய வழிமுறையைப் பார்க்கலாம்.
Gold Facial செய்யத் தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் தேன்
½ ஸ்பூன் தயிர்
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
¼ ஸ்பூன் கடல்பாசி தூள்
1 துளி தங்க எண்ணெய்
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் தேன், தயிர், மஞ்சள் தூள் மற்றும் கடல் பாசித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் நீங்கள் விருப்பப்பட்டால் அதில் சிறு துளி தங்க எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை நன்கு கலக்கி உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாகத் தேய்க்கவும்.
இதை அப்படியே ஒரு 15 நிமிடங்களுக்கு ஊற விடுங்கள். பின்னர் மென்மையான ஈரத்துணியில் முகத்தைத் துடைத்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிய பின்பு மாய்ஸ்சரைசர் தடவவும்.
நல்ல ரிசல்ட் கிடைக்க, வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்யவும். இந்த பேசியல் செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள். ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக இதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.
இந்த கோல்டன் பேஷியல் செய்ய அழகு நிலையம் சென்றால் பல ஆயிரங்களை உங்களிடம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் வீட்டிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி, உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க முடியும். இதன் மூலமாக உங்களது சருமம் என்றும் இளமையுடன் பளபளப்பாக இருக்கும்.