
இன்றைய நவீன உலகில் கூந்தல் பராமரிப்புக்கு பலவிதமான ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள், சீரம் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால், இத்தகைய பொருட்களில் உள்ள ரசாயனங்கள் நம் கூந்தலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, முடிந்தவரை தலைக்கு இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. அதுவும் பால், நெய் போன்ற பொருட்கள் அந்த காலம் முதலிலே கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நம் கூந்தலை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும்.
பால்: பாலில் வைட்டமின் பி, வைட்டமின் டி, கால்சியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம் கூந்தலுக்குள் ஊடுருவி, அதன் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கின்றன. தலைமுடிக்கு பால் பயன்படுத்துவதால் அது மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
நெய்: நெய்யில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்களுக்குள் ஊடுருவி அதை உறுதிப்படுத்தும். இதனால், முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. மேலும், நெய், கூந்தலுக்கு பளபளப்பை ஏற்படுத்தி, ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படும்.
பால் Vs. நெய்: எது சிறந்தது?
பால், நெய் இரண்டுமே ஊட்டச்சத்து மிக்கவை என்பதால், கூந்தலுக்கு பயன்படுத்துவது நல்லது. ஆனால், உங்களுடைய கூந்தலின் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து எதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது மாறுபடும். உங்கள் கூந்தல் வரட்சிமிக்கதாக இருந்தால் நெய் பயன்படுத்துவது நல்லது. இது கூந்தலுக்கு ஈரப்பதத்தை தந்து பளபளப்பாக மாற்றும். உங்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், பால் பயன்படுத்தலாம். பால், பொடுகு தொல்லையை நீக்கி கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முடி உதிர்வு இருப்பவர்கள் இரண்டையுமே பயன்படுத்தலாம். பால் முடியும் வேர்களை வலுப்படுத்தி முடியை ஆரோக்கியமாக்கும். நெய் கூந்தலுக்குத் தேவையான ஊட்டத்தைக் கொடுத்து அது உதிர்வதைத் தடுக்கும்.
நீங்கள் பாலை தலைக்கு தடவப் போகிறீர்கள் என்றால் அதில் லேசாக தேன் கலந்து தடவி 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். நெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி கழுவுவது நல்லது. அல்லது பால் மற்றும் நெய்யை சம அளவு எடுத்து தலைக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
இவ்வாறு இயற்கையான பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதால் எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே, முடிந்தவரை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உங்களது அழகைப் பராமரிக்க முயற்சிக்கவும்.