

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா என்று நம்மை ஏங்க வைக்கும் நம் சரும பிரச்னைகளுக்கு, சருமப்பொலிவு என்பது வெளிப்பூச்சு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நாம் உட்கொள்ளும் உணவுகளை பொருத்தும் நம் அழகு வெளிப்படும் என்பதை உணரவேண்டும். 20களில் இருந்த அழகு 40களில் இருக்காதுதான் என்றாலும் அழகான சருமத்தைபெற வெறும் வெளிப்பூச்சை மட்டும் நம்பியிராமல் ஆரோக்கியமான முறைகளை பின்பற்றுவது அவசியம். அதற்கு முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்தவேண்டும்.
நம் சரும வகையை முதலில் கவனிக்க வேண்டும். எண்ணெய் பசை கொண்ட, வறண்ட, இயல்பான அல்லது கலவையான சருமமா என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப பராமரிக்க வேண்டியது அவசியம். எண்ணெய் பசை சருமத்திற்கு கடலைமாவு கொண்டு முகத்தை சுத்தம் செய்வதும், வறண்ட சருமத்திற்கு பாலாடை அல்லது தயிர் கொண்டு முகத்தை சுத்தம் செய்வதும் பளிச்சென்ற ஒளிரும் தோற்றத்தைத்தரும்.
சத்தில்லாத பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. விட்டமின் சி, ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சருமத்தை மெருகூட்டும்.
முட்டைக்கரு, வேர்க்கடலை போன்றவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது. முட்டையை விரும்பாதவர்கள் சோயா பீன்ஸ், பனீர், டோஃபு, சோயா பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சருமத்திற்கு மெருகூட்ட புரதச்சத்து மிகவும் தேவை. புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது சருமம் வறண்டு போகும். எனவே புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பச்சை நிற காய்கறிகள், கீரைகள், கேரட், பீட்ரூட் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ளலாம். பழங்களில் மாதுளை, பப்பாளி, எலுமிச்சை போன்றவை சிறந்தது.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். ஆரோக்கியமான உணவு உண்பது, போதுமான உறக்கம் பெறுவது சருமத்தை ஆரோக்கியமாகவும், மாசு மருவின்றி பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
சிலர் டயட் எனக் கூறிக்கொண்டு எடையை குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை பற்றி நினைப்பதில்லை. இதனால் உடல் எடை தான் குறையுமே தவிர உடலுக்கு வேண்டிய சத்து கிடைக்காது. எனவே உடல் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் கொள்ளாமல், நாம் உட்கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. இதை பலர் தவிர்த்துவிடுகின்றனர். நேரம் கெட்ட நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்வதும், எதை சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை நிரம்பிய பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், ஜங்க் ஃபுட் போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் நம் சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
பால், பழங்கள், பிரஷ் காய்கறிகள், தயிர், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நம் சருமத்திற்கும் கேசத்திற்கும் பளபளப்பையும் பொலிவையும் தரும்.
சர்க்கரை சேர்க்காத பிரஷ் ஜூஸ்கள் குடிப்பது முகத்தை அழகாக்கும். வாழைப்பழத்துடன் தேங்காய்ப்பால், பனங்கற்கண்டு சேர்த்து மில்க் ஷேக் தயாரித்து குடித்து வரலாம். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கீரைகளையும், சூப்புகளையும் பருகி வர உடல் மட்டுமல்ல சருமமும் ஆரோக்கியம் பெறும்.
ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளில் 1,800 கலோரிகள் தேவைப்படும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதில் 60% தானியங்கள், பருப்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமையில் இருந்தும், 20% புரதசத்தில் இருந்தும், மீதமுள்ள 20% நல்ல கொழுப்பு சத்தில் இருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன.