முகம் அழகாகவும் பளப்பளப்பாகவும் தெரிய வேண்டும் என்று பலர், பல விதமான கிரீம்களை தினசரி பயன்படுத்துவதுண்டு. அது போல கண்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதற்கு பலவித முயற்சிகளில் ஈடுப்படுகின்றனர். அதில் சந்தைகளில் விற்கப்படும் காஜலை பயன்படுத்தும் பெண்கள் ஏராளம்.
சில சமயங்களில் சந்தையில் விற்கப்படும் காஜல் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. கண் எரிச்சல், அரிப்பு, கண்களில் நீர் வடிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தரலாம். இதனைத் தவிர்க்க வீட்டிலேயே காஜலைத் தயார் செய்து பயன்படுத்தினால் எந்த பாதிப்பும், அச்சமும் ஏற்படாது. காஜலை எப்படி வீட்டில் தயாரிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.
வீட்டிலே காஜல் தயாரிப்பது எப்படி?
இயற்கையான முறையில் வீட்டிலே காஜலை தயாரிக்க முடியும். நமது முன்னோர்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்துதான் கண்ணுக்கு மை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர்.
முதலில், உலர் ஆம்லா, ஆமணக்கு எண்ணெய் மற்றும் பாதாம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காஜலின் கருப்பு நிறத்தை உருவாக்க, இரண்டு கிண்ணங்களை எடுத்து, சிறிது இடைவெளியுடன் தரையில் குப்புற வைக்க வேண்டும். இப்போது கிண்ணங்ககளை இணைக்கும் படி அவற்றின் மேல் ஒரு தட்டை வைத்து அதற்கு கீழே விளக்கு ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். விளக்கின் நெருப்பானது தட்டை தொடுமாறு இருக்க வேண்டும்.
இந்த நிலையிலே சுமார் 20-25 நிமிடங்கள் வைத்து மெதுவாக தட்டை எடுத்தால், அதில் கருப்பு நிற தூள் படிந்து இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அந்த தூளை ஒரு பாத்திரத்தில் முழுமையாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின், உலர் ஆம்லா, பாதாம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, இந்த பொடியுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய்யை சேர்க்க வேண்டும்.
ஏற்கனவே சேமித்து வைத்திருந்த கருப்பு தூளுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்க்கப் பட்ட தூளையும் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு குப்பியில் வைத்து வெகு நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இதில் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நெய் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பாதாமை சற்று நெருப்பில் காட்டி, பொடியாகயும் பயன்படுத்தலாம். இந்த காஜலை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் கூட எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த காஜலை தினமும் பயன்படுத்துவதால் கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். இரவில் இந்த காஜலை கண்ணுக்கு பயன்படுத்தினால் நன்கு தூக்கம் வருவதோடு, காலையில் கண்கள் அழகாக காணப்படும்.