கண்கள் அழகாக இருந்தால் முகம் அழகாக தெரியும். நம்மில் எல்லோருக்குமே கண்களை பார்த்து பேசும் பழக்கம் உண்டு. அப்படி இருக்கும் போது கண்கள் அழகாக இருக்கவேண்டும் என அனைவரும் எண்ணவோம். கண்ணின் இமைகள் மெல்லியதாக இல்லாமல் அடர்த்தியாக இருந்தால் அழகாக இருக்கும். இதற்கு பெரும்பாலானவர்கள் மஸ்காரா, ஐ லைனர் அல்லது ஐ ஷேடோவை பயன்படுத்துவோம். இதனை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
இரவு தூங்கச் செல்லும் முன் ஐ மேக்கப்பை முழுமையாக நீக்கிய பிறகு தூங்கச் செல்லவும். கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்து பிரதிபலிக்கும் தன்மை உண்டு. அதனால் கண் இமைகளில் அதிக கவனம் செலுத்தி தினம் குளிக்கும்போது விரல்களால் புருவத்தையும், கண் இமைகளையும் மென்மையாக சுரண்டி விட்டு மசாஜ் செய்து பின் சோப்பு போட்டு தேய்த்து குளிப்பது மெல்லிய புருவங்களையும் இமைகளையும் அடர்த்தியாக்க உதவும்.
கண் இமை முடிகள் நன்கு வளர ஐஸ்கிரீம் செய்ய தேவைப்படும் ஜெலட்டினை ஐந்து நிமிடங்கள் சுடுநீரில் போட ஜெல் போல் மாறிவிடும். இதில் 10 கிராம் அளவு எடுத்து இதனுடன் விளக்கெண்ணெய் ஒரு 10 கிராம் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தினமும் இந்தக் கலவையை பஞ்சில் தொட்டு கண்களில் ஒற்றி எடுத்து கண்களை மூடி ஓய்வெடுக்கவும். இதைத் தொடர்ந்து செய்து வர கண்ணிமையின் முடிகள் வளர்வதுடன் கண்களும் ஒளிரும்.
கண் இமைகள் அடர்த்தியாக இருக்க தினம் சிறிதளவு கிரீன் டீயில் ஊறவைத்த பஞ்சினை கொண்டு அந்த பகுதியில் மசாஜ் செய்ய நன்கு ஆரோக்கியமாக வளரும்.சிறிதளவு முட்டையின் வெள்ளைக்கருவுடன் பாதாம் எண்ணெயை கலந்து கண் இமைகளில் தடவி வர கண் இமைகள் உதிர்வது தடுக்கப்படுவதுடன் நன்கு வளரவும் செய்யும்.
பெட்ரோலியம் ஜெல்லி சிறிதளவு எடுத்து கண் இமைகளில் தடவலாம். ஆலிவ் எண்ணெயை உறங்கச் செல்வதற்கு முன் கண் இமைகளில் சிறிதளவு தொட்டு தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
கண் இமைகளின் மேல் தோலில் சுருக்கமும் கருமையும் ஏற்படாமல் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐஷேடோ போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆலுவேரா ஜெல்லை சிறிதளவு கண் இமைகளில் தடவ இமைகள் நன்கு வளர்ந்து அழகு கூடும். அனைவருக்கும் தெரிந்த ஆமணக்கு எண்ணெயை (விளக்கெண்ணெய்) சிறிதளவு கைகளில் தொட்டு கண் இமைகளில் தினம் படுக்கச் செல்லும் சமயம் தடவி வரலாம்.
காட்டனை குளிர்ந்த நீரில் நனைத்து மூடிய கண் இமைகளுக்கு மேல் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்க கண்கள் ரிலாக்ஸாக உணரும்.