
பெண்களின் அழகான முகத்திற்கு அடிப்படையாக இருப்பதே கூந்தல்தான். அதனால்தான் பெண்கள் முகத்தைவிட கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். கூந்தல் தலைப்பகுதியில் உள்ள சருமத்தின் ஒரு பகுதியாகும். கெராட்டின் என்ற புரோட்டின் பொருளால் முடி வளருகிறது.
தலைப்பகுதி சருமத்தின் நுண்ணிய பகுதிகளில் இருந்து தலைமுடி வளருகிறது. அங்கே சுரப்பியும் இருக்கின்றன. தலைமுடியின் வளர்ச்சிக்கும், அழகுக்கும், அடர்த்திக்கும் இந்த சுரப்பிகளே காரணம்.
நாம் தலைக்கு வெளியே பார்க்கும் முடிக்கு ஜீவன் கிடையாது. ஆனால் சருமத்தின் உள்ளே இருக்கும் பகுதிக்கு உயிர் உண்டு. வளர்ச்சியும் உண்டு. தோலில் உள்ள ரத்தக்குழாய்களில் இருந்து கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றன. ஆகவே கூந்தல் வளரவேண்டும் என்றால் மண்டை ஓட்டுக்கு முறையாக ரத்த ஓட்டம் தேவை. உடலுக்கு சத்து நிறைந்த உணவும் அவசியம்.
பெண்களின் கூந்தலை 3 விதமாகப் பிரிக்கலாம். அவை, வறண்ட கூந்தல், எண்ணைத் தன்மை நிறைந்த கூந்தல், சராசரி தன்மை கொண்ட கூந்தல்.
வறண்ட கூந்தலை உடையவர்களுக்கு எப்போதும் முடி காய்ந்து வறண்டு போயிருக்கும். இந்த கூந்தலை சீவி முடிப்பது சிரமமான விஷயம். இவர்கள் தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை சூடாக்கி தலை ஓட்டில் தடவி விரல் நுனிகளால் 20 நிமிடம் தலை ஓட்டை மசாஜ் செய்யவேண்டும்.
இப்படி செய்தால் தலை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகமாகும். எண்ணை சுரப்பிகளின் செயல்பாடும் துரிதப்படும். தினமும் அரை மணி நேரம் தலைமுடியை பிரஷ் செய்வது நல்லது. வாரத்தில் ஒருநாள் ஷாம்பு பயன்படுத்தவும். ஷாம்புக்கு பதிலாக பாசிப்பயறு மாவு அல்லது சீயக்காய்த்தூள் பயன்படுத்தலாம்.
எண்ணைத் தன்மை நிறைந்த கூந்தலை உடையவர் களுக்கு அழுக்கும், தூசும் முடியில் நிறைந்திருக்கும். இவர்கள் சரியாக கூந்தலை பராமரிக்கவிட்டால் சீக்கிரமே முடி உதிர்ந்துவிடும். இவர்கள் தினமும் கூந்தலை கழுவி அலசவேண்டும். ஹேர்டானிக்கை தினமும் தேய்க்கலாம். இவர்கள் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்கவேண்டும். வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும். மேலும் அதிக நேரம் கூந்தலை சீவக்கூடாது.
சராசரி தன்மை கொண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை தலையில் தேய்த்து சிறிது நேரம் தலை ஓட்டின் மீது மசாஜ் செய்யவும். 10நாட்களுக்கு ஒருமுறை செம்பருத்தி இலை, அரப்புத்தூள் அல்லது பாசிப்பயிறு ஆகியவற்றை பயன்படுத்தி தலையைக் கழுவவும். இவர்கள் அதிகமாக வெயிலில் நடமாடக் கூடாது. தலையில் வெயில்படுவது முடிக்கு நல்லதில்லை.