இப்போதெல்லாம் இளமையிலேயே நரைமுடி ஏற்படும் பிரச்சனை அதிகரித்துவிட்டது. இதற்காக பலரும் வெள்ளை முடியை கருமையாக மாற்ற ஹேர் டை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை அனைவரும் சரியாகதான் பயன்படுத்துகிறார்களா? ஏதோ ஒரு ஹேர் டை வாங்கி அதை கலக்கி தலையில் தடவிக் கொள்கின்றனர். அதனால் சிலருக்கு நுகர்விதமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்தப் பதிவில் ஹேர் டை எப்படி திறம்பட பயன்படுத்துவது என்பதற்கான சில வழிகாட்டுதல்களைப் பார்க்கலாம்.
சரியான Dye தேர்ந்தெடுங்கள்: நீங்கள் உங்கள் தலைக்கு டை பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை கொடுக்கக்கூடிய, உங்கள் முடிக்கு பொருந்தும்படியான டையை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். உங்களது இயற்கையான முடியின் நிறத்தை முதலில் கவனியுங்கள். அதை ஈடு செய்யும் வகையிலான நிறத்தைக் கொடுக்கக்கூடிய டையை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது.
பேட்ச் டெஸ்ட் செய்யவும்: உங்கள் தலைமுடியில் ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன், அதனால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படுமா என்பதை தெரிந்துகொள்ள பேட்ச் சோதனை நடத்துவது முக்கியம். உங்களது சருமத்தின் சிறிய பகுதியில், பொதுவாக காதுக்கு பின்னால் அல்லது கை மணிக்கட்டில் சிறிய அளவு டையை பயன்படுத்திப் பாருங்கள். அதனால் உங்களுக்கு அரிப்பு அல்லது சிவத்தல் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டால் அந்த முடி சாயத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
உங்கள் தலைமுடியை தயார்படுத்தவும்: தலைக்கு டை அடிப்பதற்கு முன் உங்களது தலை முடி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே தலையில் எந்தவிதமான எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் போன்றவற்றின் மிச்சங்கள் இல்லாமல் சுத்தப்படுத்தவும்.
சருமத்தை பாதுகாக்கவும்: தலைக்கு டை அடிக்கும்போது அது உங்களது சருமத்தில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க, சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லை உங்களது முடியின் ஓரங்களைச் சுற்றி தடவுவது நல்லது. இதன் மூலமாக தலையில் இருந்து வழியும் டையை எளிதாக சுத்தம் செய்ய முடியும்.
சாயத்தை முறையாக கலக்கவும்: ஹேர் டையின் செயல் திறனை அதிகரிக்க அதை முறையாக கலக்க வேண்டியது அவசியம். டை உற்பத்தியாளர்கள் கொடுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சாயத்தை நன்றாகக் கலக்கவும். பின்னர் ஒரு சீப்பைப் பயன்படுத்தி சாயத்தை தலை முழுவதும் சீராகத் தடவவும்.
நேரம் கொடுங்கள்: ஒவ்வொரு ஹேர் டைக்கும், அது தலைமுடியில் நன்றாக பற்றிக்கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். எனவே உங்கள் தலைமுடி விரும்பிய நிறத்தை அடைய டையை தடவியதும் அதற்குரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். மேலும் அதிக நேரம் அப்படியே காயவிடுவதையும் தவிர்க்கவும். ஏனெனில் இது சீரற்ற நிறத்தை ஏற்படுத்தி, உங்கள் தலைமுடிக்கு சேதம் விளைவிக்கும்.
இறுதியில், டை தலையில் நன்றாகக் காய்ந்ததும், லேசாக தண்ணீர் தெளித்து பின்னர் வெந்நீரில் குளிக்கவும். அதிக சூடான நீரை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும் அதிக கெமிக்கல்கள் இல்லாத ஷாம்பூ அல்லது கண்டிஷனரைப் பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யுங்கள். இதன் மூலமாக நீங்கள் விரும்பிய இயற்கை நிறத்தை ஹேர் டை மூலமாகப் பெறலாம்.